

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் உட்பட 3 பேர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மீது வரும் 24-ம் தேதி விசாரணை நடக்கிறது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, அவரது வீட்டில் இருந்து 323 பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்புகளை முறை கேடாக சன் டி.வி. நிறுவனத்துக்கு பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் எல்.எஸ்.ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மூவரும் இரண்டு முறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து, மனு மீதான விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.