

புதுச்சேரியில் விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு ஓராண்டாகிவிட்டது. எனவே, விமான நிலையம் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரசு இது தொடர்பாக எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.
புதுச்சேரியில் லாஸ்பேட்டைப் பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் சிறிய ரக டோர்னியர் ரக விமானங்கள் இங்கு இயக்கப்பட்டன. பின்னர், பெரிய வகை விமானங்களை இயக்குவதற்காக, கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரியில் விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடனேயே 2013 ஜனவரி 17 தேதி முதல் தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் மூலமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு வாரம் இரண்டு முறை விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக ஏற்பட்ட தொடர் நஷ்டத்தால் 2014-ம் ஆண்டு ஜனவரி 31-ல் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பெரிய வகை விமானங் களை இயக்கும் வகையில் விரிவுபடுத்தி விமானநிலையம் கட்டப்பட்டு ஓராண்டுக்குள் அதை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன்பிறகு, கடந்த 2014 பிப்ரவரி 1 முதல் புதுச்சேரி விமான நிலையம் முழுமையாக மூடி கிடக்கிறது. விமான சேவை எதுவுமே இல்லை. விமான நிறுவனங்களுடன் புதுச்சேரி அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாமல் போனது.
எனவே, ஹெலிகாப்டர் சேவை தொடங்க அரசு முடிவு எடுத்து பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. அதற்காக, டெல்லியில் இருந்து வந்த தனியார் ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரியுடன் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜவேலு பேச்சுவார்த்தை நடத்தினார். புதுச்சேரியில் இருந்து காரைக்கால், திருப்பதி, சென்னை ஆகிய நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும் என்று அப்போது அமைச்சர் ராஜவேலு தெரிவித்தார். ஆனால், அந்த முயற்சியும் வெற்றி பெறாததால் விமான நிலையம் மூடியே உள்ளது.
பறிபோகும் தொழில் வாய்ப்பு
தொழில்முனைவோர் தரப்பில் கூறும்போது, “புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். ஆனால், போக்குவரத்து வசதி போதிய அளவில் இல்லை. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. விமான வசதி இல்லாததால் தொழில் வாய்ப்புகளும் பறி போகிறது” என்றனர்.
இது குறித்து அரசு தரப்பில் கேட்டபோது, “விமான நிலையம் செயல்பட பல முயற்சிகள் எடுத்தோம். மத்திய அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், விமான நிலைய ஒடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள நிலத்தை தருமாறு தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். எனினும், எங்களுக்கு முக்கிய பிரச்சினையாக நிதி பிரச்சினை உள்ளது” என்று தெரிவித்தனர்.