Last Updated : 24 Feb, 2014 09:09 AM

 

Published : 24 Feb 2014 09:09 AM
Last Updated : 24 Feb 2014 09:09 AM

பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக-வை சேர்ப்பதில் இழுபறி: ஒரே தொகுதிகளை இரண்டு கட்சிகளும் கேட்பதால் சிக்கல்

பாஜக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவரும் தேமுதிக, பாமக கட்சிகள் வட மாவட்டங்களிலுள்ள சில தொகுதிகளை தங்களுக்கே வேண்டும் என குறிப்பிட்டுக் கேட்பதால் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

மதிமுக, ஐஜேகே மற்றும் கொங்கு கட்சிகள் உள்ளிட்டவை பாஜக கூட்டணியில் தங்களது நிலையை உறுதி செய்துவிட்ட நிலையில், தேமுதிக-வையும் பாமக-வையும் பாஜக கூட்டணியில் சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், தொகுதிகளை அடையாளம் காண்பதில் இவ்விரு கட்சிகளும் போட்டி போடுவதாலேயே கூட்டணியை இறுதிசெய்ய முடியாமல் இருப்பதாகச் சொல்கின்றனர்.

இதுகுறித்து பாஜக தரப்பில் கூறும்போது, “தேமுதிக-வுக்கு 14 தொகுதிகள் வரை தருவதற்கு பாஜக தயாராக உள்ளது. ஆனால் அவர்கள், 16 தொகுதிகள், அதுவும் தாங்கள் கேட்கும் தொகுதிகள்தான் வேண்டும் என்று பிடிவாதமாய் உள்ளனர். இதேபோல், ஏற்கெனவே ’தனித்துப் போட்டி’ என பிரகடனம் செய்து, பத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்திருக்கும் பாமக, அந்த பத்து தொகுதிகளும் தங்களுக்கே வேண்டும் என்கிறது. இதில் தேமுதிக கேட்கும் தொகுதிகளும் அடக்கம். இதனால்தான் இழுபறி நீடிக்கிறது’’ என்கிறார்கள்.

விழுப்புரம், சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமக-வுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அதேபோல், தொடக்கத்திலிருந்தே இந்த மாவட்டங்களில் விஜயகாந்த்தும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். பாமக-வுக்கு செல்வாக்கான விருத்தாசலம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிகளில் அவரே நேரடியாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி, தேர்தல் நேர கட்சி மாநாடுகளையும் பாமக ஆதிக்கமுள்ள மாவட்டங்களில் நடத்தி வருகிறார். இந்நிலையில், பாமக கேட்டு வரும் ஆரணி, அரக்கோணம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தொகுதிகளை தேமுதிக தரப்பும் கேட்கிறது. இதுதான் கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேமுதிகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ’’தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக நாங்கள் உள்ளோம். எங்களுக்குச் சாதகமான தொகுதிகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதில் கேப்டன் உறுதியாக இருக்கிறார்” என்றார். பாமகவினரோ, “இது எங்களுக்கு மிக முக்கியமான தேர்தல். யாருக்காகவும் எங்களுக்கு வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுத்தரமுடியாது” என்கின்றனர்.

ஏற்கெனவே, தொகுதி பங்கீட்டு பிரச்சினையால், மோடியின் வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்கவில்லை இந்நிலையில் தேமுதிக, பாமக கட்சிகளும் தொகுதி விஷயத்தில் கறாராக இருப்பதால் பாஜகவின் கூட்டணி அறிவிப்பு மேலும் தாமதமாகலாம் என்று சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x