

மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிக்கு 7 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டக் கல்வி இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிக்கு 7 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளின் விடுதியும் மூடப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மாணவர்களின் மோதல் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதல் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரை அடிப்படையில், அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இரண்டாகப் பிரித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதையறிந்த சட்டக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியை இடமாற் றம் செய்யக்கூடாது என்று வலி யுறுத்தி கடந்த 2 நாட்களாக மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மாலை 4.30 மணியை கடந்த பிறகும் போராட்டம் நீடித்ததால் அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்குள்ளாயினர். பலமுறை கேட்டுக்கொண்டும் மறியலை கைவிட மாணவர்கள் மறுத்துவிட்டனர். போலீஸாரின் சமாதானப் பேச்சு தொடந்து தோல்வியடைந்த நிலையில், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். தடியடியில் சில மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்கள் திருப்பித் தாக்கியதில் சில போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிக்கு 7 நாட்களுக்கு விடுமுறை அளித்து சட்டக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாணவ, மாணவிகளின் விடுதியும் மூடப்படுவதாக அறிவித்துள்ளார்.