

மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா (மூ) தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தின்படி ஆண்டுக்கு 12 சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்த திட்டம் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த மானியத்தை வங்கி மூலம் மட்டும் தான் பெற முடியும். இதற்காக ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் வங்கிகளுடன் இணைக்கப்பட வேண்டும். இதன்படி 50 சதவீத மக்கள் மட்டுமே இத்திட்டத்துக்காக பதிவு செய்துள்ளார்கள்.
இப்படி பதிவு செய்தவர்களுக்கு எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.600, பதிவு செய்யாதவர்களுக்கு ரூ.400 என மார்ச் மாதம் வரை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால் வங்கியில் பதிவு செய்யாதவர்களுக்கு ரூ.400க்குட் பட்ட மானியம் மறுக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் அட்டை எண் பதிவு செய்தால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும் என நிர்ப்பந்திக்கிறார்கள்.
ஆரம்பத்தில் ரூ.300 மானியம் வழங்கப்பட்ட நிலையில் அது ரூ.200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் மானியம் படிப்படியாக குறையுமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மானியத்தை குறைக்கும் மத்திய அரசின் செயல்பாட்டால் ஏழை, எளிய, நடுத்தர, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மானியத்துடன் கூடிய சிலிண்டர் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.