

சட்டக் கல்லூரி மாணவர்களின் மறியல் போராட்டத்தால் சென்னை பாரிமுனை பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், பொதுமக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மாணவர்களின் மோதல் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதல் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரை அடிப்படையில், அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இரண்டாகப் பிரித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதையறிந்த சட்டக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியை இடமாற் றம் செய்யக்கூடாது என்று வலி யுறுத்தி கடந்த 2 நாட்களாக மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக தலைமைச் செயலகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் என்.எஸ்.சி.போஸ் சாலை, பாரிமுனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து சென்று ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையில் மறியல் செய்தனர்.
இதனால், பாரிமுனை சுற்றுவட்டார பகுதி சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் தேங்கி நின்றன. பொதுமக்கள் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மாலை 4.30 மணியை கடந்த பிறகும் போராட்டம் நீடித்ததால் அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்குள்ளாயினர். பலமுறை கேட்டுக்கொண்டும் மறியலை கைவிட மாணவர்கள் மறுத்துவிட்டனர். போலீஸாரின் சமாதானப் பேச்சு தொடந்து தோல்வியடைந்த நிலையில், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். தடியடியில் சில மாணவர்கள் காயம் அடைந்தனர். மாணவர்கள் திருப்பித் தாக்கியதில் சில போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது.
போலீஸார் தடியடி நடத்தி கூட் டத்தைக் கலைத்த பிறகே போக்கு வரத்து மெல்ல மெல்ல சீரானது. மாணவர்களின் மறியலால் 4 மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த ஆண்டில் மாற்றம் இல்லை
மறியலில் ஈடுபட்டவர்களில் 10 பேரை மட்டும் தலைமைச் செயலகத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களுடன் முதல்வர் குறைதீர்ப்பு தனிப்பிரிவு அதிகாரி இன்னொசென்ட் திவ்யா பேசினார். முதல்வரோ தலைமைச் செயலாளரோ தான் பேச வேண்டும் என மாணவர்கள் கூறினர்.
இதையடுத்து, மாணவர்கள் சார்பில் பஞ்சமூர்த்தி, ஸ்வேதா ஆகியோர் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகனை சந்தித்து பேசினர். பின்னர் நிருபர்களிடம் மாணவர் பிரதிநிதிகள் கூறும்போது, ‘‘இந்தக் கல்வியாண்டில் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய அரசு முடிவெடுக்கவில்லை. எதிர்கால முடிவுகள் பற்றி இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார்’’ என்றனர்.
அவசர ஆலோசனை
சட்டக் கல்லூரி மாணவர் பிரச்சினை குறித்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், சட்டத்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.