Published : 08 Feb 2015 11:35 AM
Last Updated : 08 Feb 2015 11:35 AM

பட்ஜெட்டில் மின் திட்ட அம்சங்கள்: மின்வாரிய உறுப்பினர்கள் 11-ம் தேதி ஆலோசனை

மின் துறை தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற் காக மின்வாரிய உறுப்பினர்கள் கூட்டம் வரும் 11-ம் தேதி நடக்கவுள்ளது.

தமிழக மின் துறை ரூ.75 ஆயிரம் கோடிக்கு அதிகமான கடன் மற்றும் நஷ்டத்தில் உள்ளது. 2016-ம் ஆண்டுக்குள் மின் வாரியத்தை ஓரளவு நிதி மற்றும் மின் உற்பத்தி அளவில் வலுப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்பேரில் பல்வேறு மின் திட்டப் பணிகளைத் தொடங்குதல், மின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மின் வாரியத்தின் தேவையற்ற செலவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. அதில், மின் துறையின் மேம்பாட்டுக்கான திட்டங்களை இடம்பெறச் செய்வது தொடர்பாக துறை அதிகாரிகளும், தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப் பரேஷன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

புதிய திட்டங்கள், தேவையான நிதி, பட்ஜெட்டில் அறிவிக்கத் தேவை யான அம்சங்கள் குறித்த பரிந்துரை களை அரசுக்கு அளிக்க, வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டம் வரும் 11-ம் தேதி நடக்கவுள்ளது.

மின் வாரிய அலுவலகத்தில் மின் வாரியத் தலைவர் சாய்குமார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழக எரிசக்தித் துறைச் செயலர் ராஜேஷ் லக்கானி, நிதித்துறை முதன்மைச் செயலர் சண்முகம், மின் வாரிய பகிர்மானக் கழக இயக்குநர் அண்ணாதுரை, திட்ட இயக்குநர் அழகப்பன், நிதிப்பிரிவு இயக்குநர் அருள்சாமி, தொடரமைப்புக்கழக இயக்குநர் ரங்கராஜ், உற்பத்திப்பிரிவு இயக்குநர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக மின் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x