Published : 07 Feb 2015 04:59 PM
Last Updated : 07 Feb 2015 04:59 PM

போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு: சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம்

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, சட்ட மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரத்தை சனிக்கிழமை தொடங்கினர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கல்லூரி மாணவர்கள் கடந்த புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இன்று 4-வது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்கிறது. இதன் ஒரு பகுதியாக சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

நடந்தது என்ன?

1891-ல் நிறுவப்பட்ட சென்னை அரசு சட்டக் கல்லூரி 124 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் உட்பட ஏராளமான உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை உருவாக்கிய பெருமை சென்னை அரசு சட்டக் கல்லூரிக்கு உண்டு.

தற்போதைய சட்டம் படித்த அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் இக்கல்லூரி முன்னாள் மாணவர்களாகத்தான் இருப்பார்கள். கடந்த 1990 முதல் இக்கல்லூரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு சென்னை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய வன்முறை சம்பவமாக வெடித்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக நீதிபதி சண்முகம் தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. அந்த கமிஷன் அரசுக்கு அளித்த பல்வேறு பரிந்துரைகளில் ஒன்று சென்னை சட்டக் கல்லூரியை 3 கல்லூரிகளாக பிரிக்க வேண்டும் என்பது.

நீதிபதி சண்முகம் விசாரணை கமிஷனின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழக அரசு சென்னை அரசு சட்டக் கல்லூரியை 2 கல்லூரிகளாக பிரிக்க முடிவுசெய்துள்ளது. சென்னை அரசு சட்டக் கல்லூரியை மூடிவிட்டு அதற்குப் பதிலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2 புதிய சட்டக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த 2 புதிய சட்டக் கல்லூரிகளை தொடங்குவதற்கு எப்படியும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். 2018-19-ம் கல்வி ஆண்டில் அவை செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது.

மாணவர்கள் எதிர்ப்பு

கல்லூரி இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பரவலாக மாணவர்கள் போராடத் தொடங்கினர். கோவை, மதுரை, புதுச்சேரி, சேலம், நெல்லை, செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களும், திருவாரூர் திருவிக கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. திமுக பொருளாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கருணாநிதி, வைகோ, ராமதாஸ் ஆகியோர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

மாணவர்கள் கோரிக்கைகள்

கல்லூரி இடமாற்றம் என்பது தேவையில்லாதது. உயர் நீதிமன்றம் அருகே சட்டக் கல்லூரி இருந்தால்தான் இங்கு படிக்கின்ற மாணவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு விசாரணையை பார்த்து நேரடி அனுபவத்தைப் பெற முடியும். எனவே, கல்லூரியை இடமாற்றம் செய்யக்கூடாது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களைத் தாக்கிய போலீஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கைகளாக உள்ளன.

நீதிமன்றம் சொல்வது என்ன?

இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்தான் நீங்கள் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தப் போராட்டத்தையும் நீதிமன்றம் ஊக்குவிக்காது. மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

'பேச்சுவார்த்தையில் பலனில்லை'

நேற்று 14 பேர் கொண்ட மாணவர் குழு சட்டத்துறை செயலாளரை சந்திக்க சென்றனர். ஆனால், சட்டத்துறை செயலாளர் மாணவர்களை சந்திக்க விரும்பவில்லையாம். ''இதெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. மாணவர்களே ஆரம்பித்த இந்தப் போராட்டம் மாணவர்களாலேயே முடிவுக்கு வர வேண்டும்'' என்று எதிர்பார்க்கிறாராம்.

'இது எங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்' என்று கொந்தளிக்கிறார்கள் மாணவர்கள். 'எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அதிகாரிகள் ஏமாற்றுகின்றனர். அரசு தன் நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இடமாற்றம் செய்யவில்லை என்பதை உறுதியாகக் கூறவேண்டும்' என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்பார்ப்பு என்ன?

மெட்ரோ ரயில் திட்டத்தால் கல்லூரிக்கு பழுது ஏற்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அறிக்கை கூறுகிறது. நீதிபதி சண்முகம் விசாரணை கமிஷனின் சென்னை அரசு சட்டக் கல்லூரியை 2 கல்லூரிகளாக பிரிக்க பரிந்துரை செய்துள்ளது.

இந்த இரண்டு அறிக்கைகளையும் சட்டசபையில் விவாதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் ஒப்புதல் பெற்ற பிறகு, மாணவர்களின் கருத்தை அறிய வேண்டும். யாரும் எதிர்க்காத பட்சத்தில் இட மாற்றம் குறித்து யோசிக்கலாம்.

அரசு இந்த விஷயத்தில் பாராமுகமாக இருப்பதும், தான் தோன்றித் தனமாக முடிவெடுப்பதும் மாணவர்களை வேறு வழியில் திசை திருப்பி, ஆபத்தில் கொண்டு போய் விடும். ஆனால், அரசு எந்த முடிவையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பது மாணவர்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x