

சிவகங்கை மாவட்டம், காரைக் குடியில் கோவிலூர் சாலையில் தனியார் ரசாயனத் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை 30 ஆண்டு களுக்கும் மேலாக இயங்கி வரு கிறது. இங்கு மூன்று ஷிப்ட்டு களில் நூற்றுக்கணக்கான தொழிலா ளர்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்த தொழிற்சாலையில் சோடி யம் ஹைட்ரோ சல்பைடு என்னும் வேதிப்பொருள் தயாரிக்கப்படு கிறது. இது சர்க்கரையை வெள்ளையாக்குவதற்கும், ஆடை களில் சாயமாகவும் பயன்படுகிறது. உள்ளூர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு கந்தக அமிலம், மெத்தனால் கலந்த கலவையை எடுத்துச் செல்லும் குழாயில் சல்பர் டை ஆக்சைடு என்கிற வாயு நேற்று காலை திடீரென கசிந்தது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொழிற்சாலை யில் பணிபுரிந்து கொண்டிருந்த சில தொழிலாளர்களும் பாதிக்கப் பட்டனர். பள்ளி மாணவர்கள் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
கிராம மக்கள் மறியல்
ஆத்திரமடைந்த கோவிலூர் கிராம மக்கள், `தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அடிக் கடி பரவும் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தி மதுரை-காரைக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் தொழிற்சாலை யின் கேட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சி செய்தனர். சிலர் கற்களை வீசியதில் அலுவலகக் கண்ணாடி உடைந்தது.
இவர்களோடு, செந்தில்நாதன் எம்பி, சோழன் சித.பழனிச்சாமி எம்எல்ஏ ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பவ இடத்துக்கு ஆட்சியர் து.முனுசாமி, மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் அஷ்வின் முகுந்த் கோட்னீஸ் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தொழிற் சாலையை ஒரு வாரம் மூட முடிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து ஆய்வு செய்து நிரந்தரமாக மூடுவது குறித்து முடிவு செய்யப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.
இதனால் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு விடுமுறை
கோவிலூர் பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டதால், அப்பகுதி யில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.
இது குறித்து தனியார் தொழிற் சாலையின் பொது மேலாளர் தனுஷ் கோடி தரப்பில் தொழில்நுட்பப் பொறியாளர் கணேசன் கூறிய தாவது: துணிக்குத் தேவையான சாயம்போட சோடியம் ஹைட்ரோ சல்பைடு தயாரிக்கிறோம். இதற்குத் தேவையான சல்பைடை எரிப்பதற்காக ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் குழாயில் சிறு விரிசல் ஏற்பட்டதால் திடீர் புகை வெளி யானது. உடனே அணைத்து விட்டோம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிலர் வேண்டுமென்றே வீண் வதந்திகளை பரப்பிவிட்டுள்ளனர் என்றார்.