Published : 04 Apr 2014 12:46 PM
Last Updated : 04 Apr 2014 12:46 PM

நூதன முறையில் மூதாட்டியிடம் 7 சவரன் நகை திருட்டு

சென்னை செல்லவிருந்த மூதாட்டி மற்றும் அவரது கணவரிடம் இளைஞர் ஒருவர் நூதன முறையில் 7 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளார்.

வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாளும் அவரது கணவரும் புதன் கிழமை சென்னை செல்ல, வந்தவாசி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் பேச்சு கொடுத்த இளைஞர் ஒருவர், முனியம்மாளுடைய மகனின் முகவரியைக் கேட்டு தெரிந்து கொண்டு, அந்த முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள தெருவில் தான் தன்னுடைய வீடும் இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் தானும் சென்னை செல்ல இருப்பதாகவும், காஞ்சிபுரம் வழியாக சென்னை செல்வது எளிது என்று கூறி, முனியம் மாளையும் அவரது கணவரையும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் ஏற்றி அழைத்து வந்துள்ளார். இருவருக்கான பஸ் டிக்கெட்டையும் இளைஞரே எடுத்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மீது இருவருக்கும் நம்பிக்கை வந்துள்ளது. காஞ்சிபுரம் வந்ததும் வயதான நிலையில் உள்ள உங்களுக்கு ஓய்வூதியம் வாங்கித் தருகிறேன் என்று இளைஞர் கூறியுள்ளார். அதை நம்பிய முனியம்மாள் மற்றும் அவரது கணவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் மனுதாக்கல் காரணமாக 500-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். பொதுமக்கள் மாலை 3 மணிக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர் என்று போலீஸார் கூறியதால், அந்த இளைஞர், முனியம்மாளையும் அவரது கணவரையும் ஆட்சியர் அலுவலகம் அருகில் மரத்தின் நிழலில் அமரவைத்துள்ளார். பின்னர் வெளியே சென்று சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர், ’உங்களுக்கு ஓய்வூதியம் கிடைத்து விட்டது. முதல் மாத ஓய்வூதி யமும் வழங்கப்பட்டுவிட்டது’ என்று கூறி ரூ.1000-த்தை முனியம் மாளிடம் கொடுத்துள்ளார்.

பின்னர், முதியோர் ஓய்வூதிய விண்ணப்பத்தில் ஒட்ட அதிகாரிகள் புகைப்படம் கேட்பதாகக் கூறி, முனியம்மாளை அருகில் இருந்த போட்டோ ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு படம் எடுக்கும்போது கழுத்தில், காதில் நகை இருந்தால் ஓய்வூதியம் கிடைக்காது, நகைகளைக் கழற்றி வைத்துக் கொள்ளுமாறு இளைஞர் கூறியுள்ளார். முனியம்மாளும் நகையை கழற்றி, ஜாக்கெட்டினுள் வைத்துக் கொண்டுள்ளார். மூக்குத்தியை அவரால் கழற்றமுடியவில்லை. பின்னர் மரத்தடிக்கு வந்தபோது, நகையை பாதுகாப்பாக பையில் வைத்துக்கொள்ளுங்கள் என்று இளைஞர் கூறவே, அவரும் நகையை பையில் வைத்துள்ளார்.

வெயிலின் தாக்கத்தில் மரத்தடியில் முனியம்மாளும் கணவரும் அயர்ந்து தூங்கியுள்ளனர். கண் விழித்து பார்த்தபோது, பை திறந்து கிடந்துள்ளது. அதில் வைத்திருந்த 7 சவரன் நகை, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முனியம்மாள் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் ஒருவர், முனியம்மாளுடைய மகனின் முகவரியைக் கேட்டு தெரிந்துக் கொண்டு, அந்த முகவரியில்தான் தன்னுடைய வீடும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x