மீனவர்களின் படகுகளுக்கு டீசல் மானியம் உயர்த்தவில்லை: திமுக குற்றச்சாட்டு

மீனவர்களின் படகுகளுக்கு டீசல் மானியம் உயர்த்தவில்லை: திமுக குற்றச்சாட்டு
Updated on
1 min read

தமிழக மீனவர்களின் படகுகளுக்கான டீசல் மானியம் உயர்த்தப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை என்று திமுக மீனவர் அணி கூறியுள்ளது.

திமுக மீனவர் அணி ஆலோசனைக் கூட்டம் அணித் தலைவர் கே.பி.பி.சாமி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

‘‘தமிழக மீனவர்களின் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கான டீசல் மானியம் உயர்த்தி தரப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 2011 தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் மீனவர்களின் படகுகளுக்கான டீசல் மானியம் உயர்த்தப்படவில்லை.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 87 படகுகளை இலங்கை அரசு திருப்பித்தர உள்ளது. இவற்றை தமிழக அரசு தனது சொந்த செலவில் மீட்டு வந்து தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட 87 படகுகளில் 30 படகுகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன.

அந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஆறும் கடலும் சேரும் முகத்துவாரப் பகுதிகளில் அடிக்கடி மணல் சரிவு ஏற்படுகிறது. அதை தடுக்க, தூர் அள்ளும் டிரெட்ஜர் மூலம் சரிசெய்ய வேண்டும்’’ என்று கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in