Last Updated : 16 Feb, 2015 08:35 AM

 

Published : 16 Feb 2015 08:35 AM
Last Updated : 16 Feb 2015 08:35 AM

கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடுகள்: சர்ச்சைக்குள்ளாகும் நியூட்ரினோ திட்டம்

தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக கேரள மற்றும் தமிழ்நாடு மாநில இடதுசாரிகள் மத்தியில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இதனால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அக்கட்சியின் மாநில மாநாடுகளில் இத்திட்டம் சர்ச்சைக்குள்ளாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநில எல்லையருகே தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அணுசக்தி துறை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்காக தமிழக அரசு 26.82 ஹெக்டேர் நிலத்தை தந்துள்ளது. நியூட்ரினோ என்ற அடிப்படை துகளைப் பற்றி ஆராய்வதற்காக இந்த ஆய்வகம் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூரியனின் தோற்றம், பிரபஞ்சத்தின் தோற்றம் உள்ளிட்ட விஞ்ஞான கோட்பாடுகளுக்கு பதில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்திட்டத்துக்கு பொதுமக்களிடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இத்திட்டத்தை வரவேற்பதாக வெளிப்படையாக தெரிவித் துள்ளன. ஆனால், கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு இன்று தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. கேரளாவில் அக்கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வி.எஸ்.அச்சுதானந்தனை நேற்று முன்தினம் கேரளாவில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு, வைகோவுடன் இணைந்து இத்திட்டத்தை எதிர்க்கப் போவதாக அச்சுதானந்தன் கூறியுள்ளார். இது இடதுசாரிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பிரகாஷ் காரத் கருத்து

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, “நியூட்ரினோ ஆய்வகம் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டம் குறித்து தமிழ்நாடு மாநிலக் குழு விவாதித்து அதை வரவேற்பதாக அறிவித்துள்ளது. அது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு” என்றார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, “வி.எஸ்.அச்சுதானந்தன் தெரிவிக்கும் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. நியூட்ரினோ ஆய்வகம் என்னும் அறிவியல் திட்டம் அவசியமானது” என்றார்.

இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறும்போது, “இத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது. நான் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானிகளையும் பின்பற்றுகிறேன். உயர் பொறுப்புகளில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் விஞ்ஞானிகள் கிடையாது” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x