

பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் செல்போனில் மிஸ்டுகால் கொடுத்து கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்து இதுவரை 16 லட்சம் மிஸ்டு கால்கள் வந்துள்ளன.
இந்தியா முழுவதும் 5 கோடியே 30 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 19 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.
அசாம், மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது முடிந்துபோன விஷயம். பிஹார் தேர்தலில் அது எதிரொலிக்காது.
தேசிய அளவில் காங்கிரஸ் தொடர்ந்து செல்வாக்கை இழந்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியிலிருந்த திராவிட கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளன. அரசியலில் இப்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாஜக நிரப்பும்.
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் பாதுகாப்பை தனித்தனியே பிரித்து பார்க்க முடியாது. பாஜக ஆட்சியில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வுக்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.