

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிந்து 27 நாளில் முடிவை வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சாதனை படைத்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,780 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், 27 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங் களையும் (மொத்தம் 1,807) நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 10-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 922 முதுகலை பட்டதாரிகள் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடை (கீ ஆன்சர்) ஜனவரி 21-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், எழுத்துத்தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டது. தேர்வு நடந்து முடிந்து 27 நாளில் முடிவை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது உடற்கல்வி இயக்குநர் தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்படவில்லை. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16-ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு இடம் மற்றும் அழைப்புக் கடிதம் விரைவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித் துள்ளார்.
கடந்த 21.7.2013 அன்று நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி தேர்வில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மேல்நிலைப்பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் தெரிவு பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.