ரயில்வே பட்ஜெட்: பாராட்டுக்குரியது.. ஏமாற்றம் தருகிறது.. - தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து

ரயில்வே பட்ஜெட்: பாராட்டுக்குரியது.. ஏமாற்றம் தருகிறது.. - தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து
Updated on
2 min read

ரயில்வே பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

வரவேற்கத்தக்கது

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பயணிகள் வசதிக்காக 67 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு, ஏழை, எளிய மக்களின் பயணத்துக்காக பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாதது ஆகியவை வரவேற்கத்தக்கவை. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு சர்வே முடிந்த நிலையில் உள்ள சென்னை - பெரும்புதூர், மதுரை - கோட்டயம் உட்பட சுமார் 24 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவற்றை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.

கட்டணம் குறையவில்லை

பாமக நிறுவனர் ராமதாஸ்: நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற உடனேயே டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, ரயில் பயணிகள் கட்டணம் 14.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, டீசல் கட்டணம் லிட்டருக்கு ரூ.12.13 குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப பயணிகள் கட்டணம், சரக்குக் கட்டணம் குறைக்கப்படும் என எதிர்பார்க் கப்பட்டது. கட்டணம் குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நாடு முழுவதும் 3,438 கடவுப் பாதைகளை அகற்ற ரூ.6,581 கோடியில் 917 மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

விலைவாசி உயரும்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக பயணிகள் மற்றும் சரக்குக் கட்டணத்தை குறைத்திருக்க வேண்டும். மாறாக, சரக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது மறைமுகமாக பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும், பணவீக்கத்துக்கும் வழிவகுக்கும். நிறைவேற்றப்படாத ரயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும் நிலையில், இதுவரை ரூ.679 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 24 ரயில் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மக்களின் பட்ஜெட்

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: மக்களின் பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுக் காலம் 120 நாட்கள், பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, கழிப்பறைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. அசதியுடன் செல்லும் பயணிகளை இது வசதியுடன் பயணம் செய்ய வைக்கும். இரட்டைவழிப் பாதையில் தூரம் அதிகரித்திருப்பது, ரயில் பயணத்தின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைப்பது இன்றைய அவசர உலகில் அவசியமாகிறது. காங்கிரஸ் அரசு போல நடைமுறைப்படுத்த முடியாததை அறிவித்துவிட்டு கிடப்பில் போடுவதைவிட, செய்ய முடிவதை ஆராய்ந்து சொல்வது நலம் என்ற வகையில், புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்கப் படும் என்பது ஆக்கப்பூர்வமான அறிவிப்பு.

உடனே ஊதியக்குழு

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: புதிய ரயில்கள் விடுவது குறித்து ஆய்வுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று கூறியிருப்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். ரயில்வே தனியார்மயமாவது தவிர்த்தல், 7-வது ஊதியக் குழு அமைத்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்.

தனியார்மயமா, இல்லையா?

மதிமுக தலைவர் வைகோ: ரயில்வே துறை வளர்ச்சிக்கு 5 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி நிதி ஆதாரம் தேவை. தனியார் - அரசு பங்கேற்புடன் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துவிட்டு, ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கப்படாது என்று கூறுவது முரணாக இருக்கிறது. சூரியஒளி மூலம் மின்உற்பத்தி செய்வது, பசுமைக் கழிவறை ஏற்படுத்துவது உள்ளிட்டவை கடந்த ரயில்வே பட்ஜெட்டிலேயே இடம்பெற்றவை. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை.

மகிழ ஒன்றுமில்லை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதில் மகிழ்ச்சியடைய ஒன்றும் இல்லை. ஏனெனில், நினைத்த நேரத்தில் கட்டணங்களை பாஜக அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. மொத்தத்தில் இது தமிழகத்துக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்.

ஏமாற்றம் தருகிறது

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோரும் ரயில்வே பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in