

சென்னையில் 124 ஆண்டு பழமை வாய்ந்த சென்னை அரசு சட்டக் கல்லூரியை மூடிவிட்டு அதற்குப் பதிலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2 புதிய சட்டக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் 3 ஆண்டு, 5 ஆண்டு பி.எல். படிப்பும், எம்எல் படிப்பும் கற்றுத்தரப்படுகின்றன. அரசு சட்டக் கல்லூரிகளில் மிகவும் பழமை வாய்ந்தது சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிதான். 1891-ல் நிறுவப்பட்ட இக்கல்லூரி 124 ஆண்டு கால பாரம்பரியம் மிக்கது.
மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் உட்பட ஏராளமான உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை உருவாக்கிய பெருமை சென்னை அரசு சட்டக் கல்லூரிக்கு உண்டு. தற்போதைய சட்டம் படித்த அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் இக்கல்லூரி முன்னாள் மாணவர்களாகத்தான் இருப்பார்கள். கடந்த 1990 முதல் இக்கல்லூரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வின்போது தேர்வுசெய்யும் முதல் கல்லூரியாக இருப்பதும் சென்னை சட்டக் கல்லூரிதான்.
இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு சென்னை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய வன்முறை சம்பவமாக வெடித்தது. இதுகுறித்து விசாரிப்பதற்காக நீதிபதி சண்முகம் தலைமையில் தமிழக அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைத்தது. அந்த கமிஷன் அரசுக்கு அளித்த பல்வேறு பரிந்துரைகளில் ஒன்று சென்னை சட்டக் கல்லூரியை 3 கல்லூரிகளாக பிரிக்க வேண்டும் என்பது.
நீதிபதி சண்முகம் விசாரணை கமிஷனின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமிழக அரசு சென்னை அரசு சட்டக் கல்லூரியை 2 கல்லூரிகளாக பிரிக்க முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து மாநில சட்டக் கல்வி இயக்ககத்தின் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
சென்னை அரசு சட்டக் கல்லூரியை 2 புதிய கல்லூரிகளாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு கல்லூரி காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் நிறுவப்படும். இதற்காக 21 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு கல்லூரி திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் அமைக்கப்படும். இதற்கு 12 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் கட்டிடப் பணிக்காக தலா ரூ.60 கோடி வீதம் மொத்தம் ரூ.120 கோடி தேவை என்று பொதுப்பணித்துறை தலைமை கட்டிடக்கலை நிபுணர் மதிப்பீடு செய்துள்ளார்.
தேவையான நிலமும், நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இந்த 2 புதிய சட்டக் கல்லூரிகளை தொடங்குவதற்கு எப்படியும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். 2018-19-ம் கல்வி ஆண்டில் அவை செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.