

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று சென்னையில் நடக்கும் மாநில மாநாட்டை தொடங்கி வைத்து கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடக்கும் மாநாட்டை தொடங்கி வைத்து பிரகாஷ் காரத் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய திராவிட கட்சிகள் நினைத்தால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வகுப்புவாதத்துக்கு எதிராகவும், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகவும் போராட முடியும். ஆனால், அதனைச் செய்யாத திராவிடக் கட்சிகள், மக்களை கைவிட்டு விட்டன. திராவிட இயக்கத்தின் பல நல்ல அம்சங்களையே அந்தக் கட்சிகள் கைவிட்டுவிட்டன.
மத்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகளையே இவர்களும் பின்பற்றுகின்றனர். காங்கிரஸ், பாஜகவுடன் எந்த தயக்கமுமின்றி கை கோர்க்கும் சந்தர்ப்பவாதிகளாக இவர்கள் திகழ்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின் படி நடக்கிறது. கட்டாய மத மாற்றம், சிறுபான்மையினர் மீது தாக்குதல் உள்ளிட்ட வன்முறைகள் இந்திய அரசியல் அமைப்பின் ஜனநாயக மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கட்சியை தமிழ்நாட்டில் வலுப்படுத்த வேண்டும். வலதுசாரிகளை பின்னடைய செய்யும் அரசியல் உத்தியை ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி வகுக்கும் என்றார்.
மாநாட்டை வாழ்த்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சக போராளிகள். அவர்கள் இரு வழிகளில் பயணித்தாலும் ஒன்றாக போராடுவார்கள்” என்றார்.
முன்னதாக, மாநாட்டு மலரை பிரகாஷ் காரத் வெளியிட்டார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.