

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 2009-ல் நடந்த தாக்குதலை நினைவுகூர்ந்து வழக்கறிஞர்கள் நேற்று கருப்பு தினம் அனுசரித்தனர். நீதிமன்றத்தைப் புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
இலங்கைப் போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கும் வழக்கறிஞர் களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அவர்கள் மட்டுமின்றி நீதிபதிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஒவ் வொரு ஆண்டும் பிப்ரவரி 19-ம் தேதியை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்பு தினமாகக் கடைபிடிக்கின்றனர். 6-வது ஆண்டு தினமான நேற்று காலை போலீஸ் அதிகாரிகளைக் கண்டித்து கோஷம் எழுப்பியபடி, உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஊர்வலம் வந்தனர். பின்னர், நீதிமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டம் குறித்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் கூறியதாவது:
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அப் போதைய காவல் ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்பிரமணி, துணை ஆணையர் பிரேம்ஆனந்த் சின்கா மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றது. அந்த அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சம்பவம் நடந்து 6 ஆண்டு கள் ஆகிவிட்டன. இனியும் பொறுமையாக இருக்க மாட்டோம். வழக்கை துரிதப்படுத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைப்போம். இவ்வாறு பால் கனகராஜ் கூறினார்.
வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.