Published : 03 Feb 2015 10:48 AM
Last Updated : 03 Feb 2015 10:48 AM

கோடைகால மின் தேவையை சமாளிக்கத் தயாராக வேண்டும் - மின் வாரிய தலைவர் உத்தரவு

கோடைகாலத்தில் அதிகப்படியான மின் தேவையை சமாளிக்க அனைத்து மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகளை முன் கூட்டியே சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மின் வாரிய தலைவர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவ மழை, குளிர் காலம் ஆகியவற்றால் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் குறைந்த மின்சாரமே தேவைப்பட்டது. இதனால் மின்வெட்டு இல்லாமல் மின் விநியோகம் சீராக இருந்தது. பல்வேறு மின் நிலையங்கள், சில நேரங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்தன. சில மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் தற்போது குளிர்காலம் முடியும் தறுவாயில் உள்ளது. இன்னும் சில நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகிய வற்றின் இயக்குநர்கள் மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மான நிலை யத்தின் அதிகாரிகளுடன், மின் வாரிய தலைவர் சாய்குமார் ஆலோ சனை நடத்தியுள்ளார்.

இதையடுத்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

கடந்த கோடை காலங்களில் அதிகபட்ச மின் தேவை காரணமாக மின் தொடரமைப்பு, மின் பகிர்மான பாதைகள், மேல்மட்ட மின் கடத்தி கள், டிரான்ஸ்பார்மர்கள் போன்ற வற்றில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. இந்த முறை அது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில், அனைத்து டிரான்ஸ்பார்மர்கள், மேல்மட்ட மின் கடத்திகள், மின் பகிர்மானப் பாதைகள், மின் உற்பத்தி நிலையக் கருவிகள், ஆகியவற்றை முன் கூட்டியே பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பக் கோளாறுகளை சமாளிக்கும் வண்ணம் அனைத்து கருவிகளையும் தேவையான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் கோடைகாலத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின் விநியோகம் செய்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. இதற்கிடையே தமிழகத்தில் கோடைகால மின் தேவையை சமாளிக்க தென்மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் மின் நிலையத்தின் இரண்டாவது அலகிலிருந்து 1,000 மெகாவாட், காற்றாலை மின்சாரம் மற்றும் தூத்துக்குடியில் அமைக்கப் பட்டுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவன புதிய மின் நிலையம் ஆகியவற்றிலிருந்து மின்சாரம் கொண்டு வர கட்டமைப்புகளை கூடுதலாக ஏற்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து மின் துறை அதி காரிகள் கூறும்போது, “மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திரு நெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் விருது நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 20 இடங்களில், 110 கிலோ வோல்ட், 230 கிலோ வோல்ட் மற்றும் 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களும், புதிய மின்பாதைகளும் அமைக்கப் பட உள்ளன. 56.58 கோடி ரூபாய் மதிப்பில், 409 கிலோ மீட்டருக்கு கூடுதல் மின் பாதை அமைக்கப்படுகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x