கூடுவாஞ்சேரி அருகே முன்விரோதத்தால் கொடூரம்: நாட்டு குண்டு வீசி இளைஞர் கொலை - கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்.பி. உத்தரவு

கூடுவாஞ்சேரி அருகே முன்விரோதத்தால் கொடூரம்: நாட்டு குண்டு வீசி இளைஞர் கொலை - கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்.பி. உத்தரவு
Updated on
1 min read

கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியில், முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவருடைய மகன்கள் பிரபு (31) மற்றும் பிரதாப் (25). இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக பிரபுவை, போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், பெருமாட்டு நல்லூர் பகுதியில் பிரபுவின் தம்பி பிரதாப் நேற்று அதிகாலை லோடு ஆட்டோ ஓட்டி சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென வாகனத்தின் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பிரதாப், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம் பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், கூடுவாஞ்சேரி காவல்நிலையத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர், குற்றவாளிகளை பிடிக்க வண்டலூர் டி.எஸ்.பி. முகிலன் தலைமையில் தனிப்படை நியமித்து உத்தரவிட்டார். பெருமாட்டுநல்லூர் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க புறக்காவல் நிலையம் அமைத்து, கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in