

சென்னை ராயபுரத்தில் ரூ.2 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் சிங்காரவேலர், ஜீவரத்தினம் மணிமண்டபப் பணிகளை ஏப்ரலுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மயிலாப்பூரில் மீனவ கிராமத்தில் பிறந்து, வழக்கறிஞராகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர். ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கியபோது, தனது வழக்கறிஞர் அங்கியை தீயிட்டு கொளுத்திவிட்டு, விடுதலை போராட்ட வீரராக மாறினார். தென் பகுதியில் நடந்த பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.
இதேபோல, ஏழை மீனவர் குடும்பத்தில் பிறந்து திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜீவரத்தினம். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். இவர்கள் இருவருக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என மீனவ மக்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர்.
மீனவ சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சிங்காரவேலர் மற்றும் ஜீவரத்தினம் ஆகியோருக்கு சென்னையில் மணிமண்டபங்கள் கட்டப்படும் என கடந்த 2011-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். இதன்படி, சென்னை ராயபுரத்தில் ரூ.2 கோடியே 34 லட்சம் செலவில் மணிமண்டபங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளை செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தார். பணிகளை, ஏப்ரலுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
மணிமண்டபங்களில் சிங்காரவேலர் மற்றும் ஜீவரத்தினம் ஆகியோருக்கு தனித்தனியாக மார்பளவு சிலை அமைக்கப்பட உள்ளது. மணிமண்டபம் எதிரே குளிரூட்டப்பட்ட நவீன வசதியுடன் கூடிய நூலகம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நூலகத்துக்கு ஜெனரேட்டர், வாகன நிறுத்துமிடம் போன்ற சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.