Published : 11 Feb 2015 10:37 AM
Last Updated : 11 Feb 2015 10:37 AM

திமுக புகார் எதிரொலி: ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மாற்றம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக அளித்த புகாரையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் மாற்றப்பட்டுள்ளார்.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மாவை திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தின் சொந்த மாவட்டமான தேனியில் கலெக்ட ராக இருந்த கே.எஸ்.பழனிச்சாமி, சமீபத்தில் திருச்சி கலெக்டராக மாற்றப்பட்டார். தற்போது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு அவர்தான் மாவட்ட தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். அதிமுகவுக்கு சாதகமாக செயல்படவே அவர் திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான மனோகரன், அதிமுக பின்புலம் கொண்டவர். அதனால் அதிமுகவின் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை.

ஸ்ரீரங்கம் தொகுதியில் போலி வாக்காளர்கள் குறித்தும் ஃப்ளக்ஸ் பேனர் வைப்பது, வாக்காளர்களுக்கு மது, வேட்டி, சேலை, போன்றவற்றை கொடுப்பது போன்ற அதிமுகவினரின் விதிமீறல்கள் குறித்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும், தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் 63 முறை புகார் அளிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

எனவே, முறைகேடுகளைப் பற்றி கவலைப்படாத திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும். பணப் பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக பறக்கும் படையினரையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவுடன் நேற்றிரவு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து மனோகரன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டி.ஜி.வினய் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x