Published : 13 Feb 2015 10:44 AM
Last Updated : 13 Feb 2015 10:44 AM

மணல் பகுதியில் செல்லும் ‘108’ மெரினா கடற்கரையில் அறிமுகம்: தமிழகம் முழுவதும் படிப்படியாக அமல்

சக்கரம் சிக்கிக்கொள்ளாமல் மணல் பகுதியிலும் விரைந்து செல்லக் கூடிய பிரத்தியேக 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. பழவேற்காடு, பெசன்ட் நகர், மாமல்லபுரம் என தமிழகம் முழுவதும் கடலோர நகரங்களில் இந்த வாகனம் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது.

விபத்து போன்றவற்றில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் சேவையை ‘108’ ஆம்புலன்ஸ் சிறப்பாக செய்துவருகிறது. வழக்கமான வாகனங்கள், மணல் பகுதியில் எளிதில் செல்ல முடிவதில்லை. இதனால், கடல் அலையில் சிக்கி மீட்கப்படுவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, கடற்கரை போன்ற மணற்பாங்கான இடங்களிலும் விரைந்து செல்லக்கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் பிரத்தியேகமாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஸ்ட்ரெச்சர், ஆக்ஸிஜன், முதலுதவி மருந்து களுடன், பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்களும் இதில் உள்ளனர்.

அலைகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டவுடன் இக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளிப்பார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்வார்கள். மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் - உழைப்பாளர் சிலை இடையே இந்த பிரத்தியேக 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் இன்ஜின் சக்தி, வண்டியின் 4 சக்கரங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத னால் ஆம்புலன்ஸ் சக்கரங்கள் மணலில் மாட்டிக் கொள்ளாமல் செல்லும். இதேபோல, மலைப் பகுதிகளில் தடையின்றி சென்று மருத்துவ உதவி அளிக்க முப்பது 108 ஆம்புலன்ஸ்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் கூறும்போது, ‘‘தற்போது முதல்கட்டமாக மெரினா கடற் கரையில் மணற்பாங்கான பகுதியில் செல்லும் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு நன்றாக உள்ளதா என கண்டறிந்த பிறகு, அடுத்தகட்டமாக பழவேற்காடு, பெசன்ட் நகர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். தொடர்ந்து, தமிழகத்தின் மற்ற கடலோர மாவட்டங்களிலும் அறிமுகம் செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x