

மேட்டூர் அணை மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்பட 11 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
மேட்டூர் அணை யில் இருந்து ஆண்டும்தோறும் காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும்.
கடந்த ஆண்டு போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், அணை யில் இருந்து குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறந்துவிட முடிய வில்லை. பின், தென்மேற்கு பருவ மழையைத் தொடர்ந்து, அணைக்கு நீர் வரத்து வர ஆரம்பித்தது. பின், ஆகஸ்ட் 10-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரை ஜனவரி 28-ம் தேதி நிறுத்த வேண்டும். ஆனால், சில மாவட்டங்களில் அறுவடை பணி முழுமையடைய வில்லை என்பதால் தண்ணீர் திறந்து விடுவதை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 5-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு மேட்டூர்அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.