

பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் பெட்டி திடீ ரென கழன்று நடைமேடை மீது ஏறியதால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு பறக்கும் மின்சார ரயில் சேவை உள்ளது. இதில் 6 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலையில் வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு ஒரு மின்சார ரயில் வந்தது. காலை 10.15 மணியளவில் அந்த ரயில் சென்ட்ரல் அருகே பூங்கா நகர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரயிலின் 4-வது பெட்டி மட்டும் மற்ற பெட்டிகளின் இணைப்பில் இருந்து விலகி, நடைமேடையில் பயங்கரமாக இடித்து, நடைமேடை மீது லேசாக ஏறி நின்றது.
அந்த பெட்டி அதிக சத்தத்துடன், குலுங்கியதால் அதில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏதோ பெரிய விபத்து ஏற்பட்டுவிட்டது என்று கடும் அதிர்ச்சி அடைந்தனர். இருக்கையில் இருந்த சில பயணிகளும், நின்று கொண்டிருந்தவர்களும் கீழே விழுந்தனர்.
காலை நேரம் என்பதால் ரயில் நிலைய நடைமேடையில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரயில் திடீரென நடைமேடையில் மோதி மேலே ஏறுவதை பார்த்த பயணிகள், தங்கள் மீது மோதிவிடுமோ என்ற அச்சத்தில் அலறியடித்து ஓடினர். ரயில் நின்ற பின்னர் அதிலிருந்த பயணிகள் அச்சத்துடன் வெளியே வந்தனர். 5 மற்றும் 6-வது பெட்டி நடைமேடைக்கு வெளியே இருந்ததால் அதிலிருந்த பயணிகள் சிரமப்பட்டு கீழே இறங்கினர்.
பூங்கா நகர் நிலையத்தில் நிற்பதற்காக ரயில் மிகவும் மெதுவாகவே வந்தது. இதனால் நடைமேடையில் உரசியதை அறிந்ததும் ரயிலை உடனே நிறுத்த முடிந்தது.
விபத்து குறித்து சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே பணியாளரிடம் கேட்டபோது, "ரயிலின் சக்கரங்கள் தடம் புரளவில்லை. தண்டவாளத்திலோ, சக்கரத்திலோ பாதிப்பு இல்லை. ரயில் பெட்டிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இரும்பு கம்பி மற்றும் போல்ட்டுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். விபத்துக்குள்ளான ரயிலின் 4-வது பெட்டியில் இந்த இணைப்பு உடைந்து பெட்டி அதன் அச்சை விட்டு விலகி நடைமேடையில் ஏறிவிட்டது. ரயில் வேகமாக சென்றிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும்" என்றார்.
இந்த விபத்தால் அந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மயிலாப்பூர்-வேளச்சேரி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டன.
விபத்து குறித்து அறிந்ததும் பேசின்பிரிட்ஜில் இருந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்பு ரயில் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன. மதியம் 1 மணியளவில் விபத்துக்குள்ளான பெட்டி மீட்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னரே பறக்கும் ரயில் பாதையில் போக்குவரத்து சீரானது.
இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.