

மாநகராட்சிப் பள்ளிகளில் 4 மாதங்களுக்குள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் அமைப்பின் சென்னை செயலாளர் வி.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
சென்னை அருகே மணலி சடையங்குப்பத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டிடம், குடிநீர், கழிப்பிடம், மின்சாரம், இருக்கை, முதலுதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். அதைக் கண்காணிக்க கல்வியாளர், பெற்றோர்-மாணவர்களின் பிரதிநிதி, தொழில்நுட்ப நிபுணர் ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது, இதுபற்றி ஆராய ஒரு குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 3 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று
உயர் நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை யிலான குழு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
281 சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 68 பள்ளிகளில் மட்டுமே அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற பள்ளி களில் இந்த வசதி செய்யப்பட வேண்டியுள்ளது என்று குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் அடிப் படை வசதிகள் செய்து கொடுப் பதற்கு 6 மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் கோரப்பட்டிருக்கிறது. இப் பணியை 4 மாதங்களுக்குள் மாநகராட்சி செய்து முடிக்க வேண்டும். அப்போதுதான் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கும்போது அனைத்துப் பள்ளி களும் அடிப்படை வசதிகளுடன் இருக்கும். இப்பணியை நாங்களும் கண்காணிப்போம். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியது குறித்து மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மார்ச் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.