

கோவையில் தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அகில இந்திய காங்கிரஸ் தலைமை மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்சகட்ட அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் காங்கிரஸில் இருந்து விலகி, மீண்டும் தமாகாவை தொடங் கினார். வாசன் வெளியேறியதால் கட்சியில் ப.சிதம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவருக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து ப.சிதம்பரத்தை கட்சி மேலிடம் புறக்கணித்து வருவதால் அவர் அதிருப்தியின் உச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:
அண்மைக்காலமாக ப.சிதம்ப ரத்தையும் எங்களையும் காங்கிரஸ் மேலிடம் பெரிய அளவில் புறக்கணித்து வருகிறது. கார்த்தி சிதம்பரத்தை மாநில இளைஞரணி தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக கட்சி மேலிடம் நிராகரித்து வருகிறது. ஞானதேசிகன் ராஜினாமா செய்ததும், ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதுவும் நிராகரிக்கப்பட்டது.
ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் கட்சியைவிட்டு வெளி யேறியதால் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இது தொடர்பாக ப.சிதம்பரத்திடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை. ஐ.மு. கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளாக அரசின் ஏற்றத் தாழ்வுகளில் பங்கெடுத்து எத்தனையோ சவால்களை சமாளித்தவரை நிராகரிப்பது எப்படி முறையாகும். இது ப.சிதம்பரத்தை அதிருப்தியடைய வைத்துள்ளது.
தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில்தான் கடந்த 14-ம் தேதி நடந்த எச்.வசந்தகுமாரின் புத்தக வெளியீட்டு விழாவில் பாதியிலேயே வெளியேறிய சிதம்பரம், பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் விழாவுக்கு சென்றார். அரிதாகவே கட்சி விஷயங்களை வெளிப்படையாக பேசும் அவர், கோவையில் தனது ஆதரவாளர்கள் 6 பேர் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டதும் கோபமடைந்தார். இந்தப் பிரச்சினையில் அகில இந்திய தலைமை தலையிட வேண்டும் என்று அறிக்கையும் வெளியிட்டார்.
ஆனால் காங்கிரஸ் தலைமை இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் கட்சி மேலிடம் மீது சிதம்பரம் உச்சக்கட்ட அதிருப்தியில் உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.