Published : 11 Feb 2015 11:11 AM
Last Updated : 11 Feb 2015 11:11 AM

கிரிக்கெட்டை தொடர்ந்து சமூக சேவை எனது இரண்டாவது இன்னிங்ஸ்: கல்லூரி விளையாட்டரங்க திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர் பெருமிதம்

கிரிக்கெட் எனது முதல் இன்னிங்ஸ். என் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கும் சமூகத்துக்காக ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்பது எனது இரண்டாவது இன்னிங்ஸ் என்று சென்னை கல்லூரி உள்விளையாட்டரங்க திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சுமார் ரூ.17 கோடியில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட உள்விளையாட்டரங்கை, நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திறந்துவைத்தார்.

உள்விளையாட்டரங்கில் அவர் நுழைந்தபோது அங்கு அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் எழுந்து நின்று ‘சச்சின் சச்சின்’ என்று உற்சாகக் குரலெழுப்பினர். டெண்டுல்கர், அவர்களை நோக்கி கையசைத்து, புன்முறுவல் செய்தார். பின்னர், அவர் பேசியதாவது:

எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் சென்னையும் ஒன்று. ரசிகர்களாகிய உங்களின் ஆதரவாலும் அன்பாலும்தான் என்னால் கிரிக்கெட்டில் சாதிக்க முடிந்தது. உலக கோப்பை போட்டி மிகவும் சவால் மிகுந்ததாக இருக்கும். கண்டிப்பாக நமது அணி அந்த சவாலை தைரியமாக எதிர்கொள்ளும் என்றார்.

பின்னர், மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு சளைக்காமல் சச்சின் டெண்டுல்கர் பதிலளித்தார். முதல் கேள்வியாக மாணவி சரண்யா, ‘வாழ்க் கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?’ என்றார். இதற்கு, ‘சாதிக்க விரும்புவதில் தீவிர ஆர்வம் காட்ட வேண்டும். இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அந்த வகையில் நான் கிரிக்கெட்டில் தீவிர ஆர்வம் காட்டினேன். வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழிகளே கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும்’ என்று டெண்டுல்கர் பதிலளித்தார்.

மாணவர் சஞ்சய், ‘கிரிக்கெட்டில் எப்போதாவது ஏமாற்றங்களை சந்தித்திருக் கிறீர்களா?’ என்று கேட்டார். இதற்கு, ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், தோல்விகளில் இருந்து நம்மால் நிறைய பாடம் கற்றுக்கொள்ள முடியும். அந்த உணர்வு நமக்கு ஊக்கம் தரும். தோல்வியடையும்போது நாம் அனுபவங் களைப் பெறுகிறோம்’ என்றார் டெண்டுல்கர்.

‘பாரத ரத்னா விருது பெற்றபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?’ என்ற மாணவர் கிஷோரின் கேள்விக்கு சற்று உருக்கமாகவே பதிலளித்தார். ‘அந்த நேரத்தில் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இந்திய மக்கள் என் மீது எவ்வளவு அன்பு, பாசம் வைத்திருக் கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அந்த அன்பை, பாசத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். கிரிக்கெட் எனது முதல் இன்னிங்ஸ், இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது இரண்டாவது இன்னிங்ஸ். தற்போது அத்தகைய விஷயங்களில்தான் கவனம் செலுத்துகிறேன்’ என்றார்.

‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உங்களின் உணர்வு எப்படி இருக் கிறது?’ என்ற கேள்விக்கு, ‘இப்போது நிறைய நேரம் குடும்பத்தினருடன் செலவிட முடிகிறது. நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிகிறது. கிரிக்கெட் விளையாடிய காலத்தில் என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியின் ஆண்டுவிழாவுக்குக்கூட போக முடியவில்லை. இப்போது அவர்களின் பள்ளி ஆண்டுவிழாக்களில் கலந்துகொள் கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்’ என்றார் டெண்டுல்கர்.

‘மாணவ- மாணவிகளுக்கு நீங்கள் கூறும் செய்தி என்ன ?’ என்ற மாணவி யுவராணியின் கேள்விக்கு, ‘வாழ்க்கையில் சாதிக்க விரும்பினால் ஏதாவது ஒர் இலக்கு வைத்திருங்கள். கனவு காணுங்கள், இலக்கை நோக்கி கடுமையாக உழையுங்கள், தோல்வியைக் கண்டு துவண்டுபோய்விடாதீர்கள். ஒருபோதும் நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். ஒருநாள் உங்கள் கனவு நனவாகும்’ என்றார் டெண்டுல்கர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி ஜெ.சாய்பிரகாஷ் தலைமை தாங்கினார். கிங்ஸ் பொறியியல் கல்லூரி தலைவரும் மன்னார்குடி எம்எல்ஏ-வு மான டி.ஆர்.பி.ராஜா வாழ்த்திப் பேசினார். உள்விளையாட்டரங்கை வடிவமைத்த ஆர்.ஆர். துளசி, நரேந்திரன், விஜயகுமார் ஆகியோரை டெண்டுல்கர் கவுரவித்தார்.

முன்னதாக, சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் சி.வி.ஜெயகுமார் வரவேற்றார். விழாவில், கல்லூரி அறங் காவலர்கள் கலைச்செல்வி லியோ முத்து, ஷர்மிளா ராஜா உட்பட சாய்ராம் கல்வி குழுமங்களின் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x