Published : 16 Feb 2015 10:11 AM
Last Updated : 16 Feb 2015 10:11 AM

நேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களுக்கு சிலிண்டர் விநியோகிப்பதில் அலைக்கழிப்பு: காஸ் ஏஜென்சிகள் மீது குற்றச்சாட்டு

மத்திய அரசின் நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர்களை வழங்காமல் ஏஜென்சிகள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் நேரடி எரிவாயு மானிய திட்டம் நாடு முழுவதும் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இத்திட்டத்தில் நுகர்வோர்கள் பலர் இணைந்து வருகின்றனர். இதுவரை இத்திட்டத்தில் 64 லட்சம் பேர் இணைந்துள்ளனர். நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் நுகர்வோர்கள் தாங்கள் விரும்பும்போது இணைந்து கொள்ளலாம்.

ஆனால் வரும் ஜூன் மாதத்துக்குள் இணையும் நுகர்வோர்களுக்குதான் அதற்கு முந்தையை மாதத்துக்கான மானிய தொகை வழங்கப்படும். ஜூன் மாதத்துக்கு பின்பு இணையும் நுகர்வோர்களுக்கு அதற்கு முந்தைய மாதத்துக்கான மானியம் வழங்கப்படாது. அதேசமயம் திட்டத்தில் எப்போது இணைந்தாலும் அதற்கான முன்பண தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் இணைவது நுகர்வோர்களின் விருப்பம் என்ற போதிலும், ஒரு சில ஏஜென்சிகள் மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர்களை வழங்காமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் கூறும்போது,‘‘ ஆவடியில் உள்ள ராகவேந்திரா இண்டேன் எரிவாயு ஏஜென்சியில் சிலிண்டர் பெற பதிவு செய்தேன்.

ஆனால் பதிவு செய்து 18 நாட்களாகியும் சிலிண்டர் கிடைக்கவில்லை. இதுபற்றி ஏஜென்சியில் சென்று கேட்டால், மானிய திட்டத்தில் உடனடியாக சேருங்கள் என கூறுகிறார்கள். சிலிண்டர் வராதது பற்றி பதிலளிக்க மறுக்கிறார்கள். இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் சிலிண்டரை கடனாக பெற்று பயன்படுத்தி வருகிறோம்” என்றார்.

அடையாறு பகுதியை சேர்ந்த லட்சுமி கூறும்போது, “அடையார் காஸ் ஏஜென்சியில் பதிவு செய்து பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் சிலிண்டர் கிடைக்கவில்லை. ஏஜென்சிக்கு சென்று கேட்டால், ‘ நீங்கள் மானிய திட்டத்தில் இணையாமல் இருக்கிறீர்கள் அதனால் உங்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது’ என்று சொல்கிறார்கள்” என்றார்.

இது குறித்து ஐஓசி அதிகாரி வெற்றிச்செல்வன் கூறும்போது, “காஸ் ஏஜென்சிகளிடம் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நுகர்வோர்களை நேரடி மானிய திட்டத்தில் இணைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றுதான் கூறியுள்ளோம். திட்டத்தில் இணையாத நுகர்வோர்களுக்கு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்று ஐஓசி கூறவில்லை. நுகர்வோர்கள் நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணையவில்லை என்றாலும் அவர்கள் பதிவு செய்யும் சிலிண்டர்களை ஏஜென்சிகள் வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x