Published : 13 Feb 2015 08:19 AM
Last Updated : 13 Feb 2015 08:19 AM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 82.54% வாக்குப்பதிவு

அமைதியாக நடந்த ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.54 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. அன்றே முடிவும் அறிவிக்கப்பட உள்ளது.

2011ல் 80.95 சதவீத வாக்குகள் பதிவாகின. தற்போது அதைவிட 1.59 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு தொடர்பான முந்தையப் பதிவுகள்:

16.00 PM : ஸ்ரீரங்கம் தொகுதியில் பிற்பகல் 4 மணி நிலவரப்படி 76.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. பெண் வாக்காளர்கள் 77.8% பேரும், ஆண் வாக்காளர்கள் 75.9% பேரும் வாக்களித்துள்ளனர்.

15.15 PM: ஸ்ரீரங்கத்தில் இதுவரை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 81 வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15.05 PM: ஸ்ரீரங்கம் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.89% வாக்குகள் பதிவாகியுள்ளன.

14.36 PM: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முத்துராசநல்லூர் வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது.

13.30 PM: ஸ்ரீரங்கம் தொகுதியில் மதியம் 1மணி நிலவரப்படி 53.2% வாக்குகள் பதிவாகியுள்ளன.

13.20 PM: ஸ்ரீரங்கத்தில் வாக்குப்பதிவு நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற்று வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்.

12.47 PM: இடைத்தேர்தலையொட்டி வெளியூர் நபர்கள் வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டதை மீறியும், தொகுதியில் தங்கியிருந்த திருப்பூரைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் பிடித்து விசாரணை

12.42 PM: ஒரு சில வாக்காளர்கள் பெயர் இரண்டுக்கும் மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

11.30 AM: முற்பகல் 11 மணியளவில் 34.3% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

11.00 AM: கிராமப்புறங்களில் உள்ள ஒரு சில வாக்குச்சாவடிகளில், 11 மணிக்கே 40% வாக்குப்பதிவாகியுள்ளதாக தகவல்.

10.30 AM: ஸ்ரீரங்கத்தில் நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு.

10.00 AM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் டிராபிக் ராமசாமி உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

9.45 AM: ஸ்ரீரங்கம் நகருக்கு பாரம்பரிய நகர் அந்தஸ்து பெற்றுத்தரப்படு. பாஜக வெற்றி பெற்றால் மத்திய அரசு உதவியுடன் ஸ்ரீரங்கத்தை சாட்டிலைட் நகராக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போன்ற வாக்குறுதிகளை பாஜக முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

9.30 AM: இனாம்குளத்தூர் வாக்குச்சாவடியில் பெண்கள் அதிகளவில் வாக்களிக்க திரண்டனர்

9.15 AM: தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 16-ம் தேதி எண்ணப்படுகின்றன.

9.00 AM: காலை 9 மணி நிலவரப்படி 16.2% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தகவல்.

8.47 AM: ஓலையூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

8.43 AM: திமுக வேட்பாளர் என்.ஆனந்த் சாந்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

8.20 AM: தொகுதியின் கிராமப்புறங்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

8.15 AM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கையடக்க கணினி (டேப்லெட் பிசி) மூலம் வாக்குப்பதிவு நிலவரத்தை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஏற்பாடு இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8.06 AM: ஸ்ரீரங்கம் தீரண் நகரில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

7.33 AM: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு தேர்தல் பார்வையாளர் அனில் குமார், வாக்குச்சாவடிகளில் நேரடியாக கண்காணிப்பு மேற்கொண்டார்.

7.26 AM: பல்வேறு வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

7.10 AM: இடைத்தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

7.00 AM : ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி, திமுக வேட்பாளர் என்.ஆனந்த், பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம் ஆகியோர் களம் காண்கின்றனர்.

322 வாக்குச்சாவடிகள்:

வாக்குப்பதிவுக்கென 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இத்தொகுதியில் மொத்தம் 2,70,129 வாக்காளர்கள் உள்ளனர். இவை 31 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒன்று என 322 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குச் சாவடிக்கு தலா 2 என மொத்தம் 644 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மினி லாரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்குத் தேவையான 89 பொருட்கள் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அவசர தேவைக்கென கூடுதலாக 48 கட்டுப்பாட்டுக் கருவிகள், 96 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

பாதுகாப்பு பணியில் 2657 பேர்

வாக்குப்பதிவு நாளில் மத்திய ஆயுதப்படையின் 10 கம்பெனிகள் உட்பட 2,657 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கட்டணமில்லா தொலைபேசி (1800 425 7030) எண்ணுடன் திருச்சியில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதுவரை 33 புகார்கள் பெறப்பட்டு அவை முடித்துவைக்கப்பட்டுள்ளன. மக்கள் புகார் அளிக்க வசதியாக ‘1950’ என்ற கட்டணமில்லா 24 மணி நேர தொலைபேசியுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. .

வீடியோவில் பதிவு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 322 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படுட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தபடியே வாக்குப்பதிவைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொது பார்வையாளர், காவல் பார்வையாளர், செலவினப் பார்வையாளரையும் தேர்தல் ஆணையம் நியமித்தது. கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

2.70 லட்சம் வாக்காளர்கள்

இந்த தொகுதியில் 1,33,020 ஆண்கள், 1,37,096 பெண்கள், 13 இதரர் என மொத்தம் 2,70,129 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், 3 வாக்குச் சாவடி அலுவலர்கள் என வாக்குச் சாவடிக்கு 4 பேர் வீதம் மொத்தம் 1,572 பேருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இவர்களுக்கு வாக்குச்சாவடி வாரியாக பணி நியமன ஆணைகளை ஸ்ரீரங்கம் சார் ஆட்சியரும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான டி.ஜி.வினய் நேற்று வழங்கினார்.

டி.வி-யில் நேரடி ஒளிபரப்பு

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நடைபெறும் வாக்குப்பதிவு நிகழ்வுகள் அரசு கேபிள் டி.வி-யில் உள்ளூர் டி.வி. சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதே போன்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் (www.elections.tn.gov.in) வாக்குச் சாவடி வாரியாக வாக்குப்பதிவு நிகழ்வுகளை வீடியோவாக பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகின்றன.

தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடிகளில் 79 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீ ஸாருடன், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர். பதற்றமான வாக்குச்சாவடி கள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸாரின் தீவிர ரோந்தும், துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை கண்காணிக்க…

தேர்தல் வாக்குப்பதிவைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு பார்வையாளர் அனில்குமார் ஜா, பொதுப் பார்வையாளர் பல்கார் சிங், செலவினப் பார்வையாளர் ஸ்ரீதர் தோரா, சட்டம் ஒழுங்கு பார்வையாளர் வினோத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டி.ஜி.வினய் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x