

தமிழகம் முழுவதும் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ள சிலைகள், கோயில்களை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்குப் பதில் அளிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் அமைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய் துள்ள பொதுநல மனுவில் கூறியி ருப்பதாவது: தமிழகத்தில் நெடுஞ்சாலை, தெருக்கள், நடை பாதைகளில் சுமார் 16,612 சிலைகள், 6,311 அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. 3.13 லட்சம் கொடிக் கம்பங்கள் உள்ளன. இவற்றால் போக்குவரத்து இடை யூறு ஏற்படுகிறது. சாலை களை ஆக்கிரமித்து பலர் கட்டிடங் கள் கட்டியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஆக்கிர மிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு இதுவரை நிறை வேற்றப்படவில்லை
மாநிலம் முழுவதும் அகற்ற வேண்டிய சிலைகள், வழிபாட்டுத் தலங்களை கணக்கெடுக்க நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க உத்தரவிட வேண் டும். இடையூறாக சாலைகள், தெருக்கள், நடைபாதைகளில் உள்ள சிலைகள், வழிபாட்டுத் தலங்களை அகற்ற, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்கு பதில் அளிக்குமாறு தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர், நகராட்சி நிர்வாகச் செயலர், காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை மார்ச் 12க்கு ஒத்திவைக்கப்பட்டது.