

தி.நகரில் வங்கியில் பணம் செலுத்த வந்தவர் மீது மிளகாய் பொடி தூவி ரூ.9 லட்சம் பறிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (27). பாரி முனை பர்மா பஜாரில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். கடையில் பணிபுரி யும் மணி, தவுலத் ஆகியோரிடம் ரூ.9 லட்சம் பணத்தை கொடுத்து, தி.நகரில் உள்ள ஒரு வங்கியில் செலுத்த சொன்னார் அனிஷ். இரு வரும் ஒரு சூட்கேசில் பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன் தினம் பிற்பகலில் காரில் தி.நகர் சென்றனர்.
தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் உள்ள ஒரு வங்கி முன்பு கார் நின்றது. மணி, தவுலத் ஆகியோர் ரூ.9 லட்சம் இருந்த சூட்கேசை எடுத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கினார்கள். அப்போது திடீரென 5 பேர் கும்பல் அவர்களை சூழ்ந்து கொண்டு, மணி, தவுலத் ஆகியோர் மீது மிளகாய் பொடி தூவினர்.
இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுதாரிப்பதற்குள் பணம் இருந்த சூட்கேசை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார் கள்.
உடனே மணி, தவுலத் இருவரும் அபயக்குரல் எழுப்ப அருகே இருந்தவர்கள் கொள்ளையர்களை நோக்கி ஓடி வந்தனர். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் பணப்பெட்டியை அங்கேயே போட்டுவிட்டு, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். வங்கி முன்பு நடந்த இந்த கொள்ளை சம்பவம் அங்கே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி யிருந்தது.
அதில் கொள்ளையர்கள் வந்த வாகனங்களின் எண்களும் பதிவாகி இருந்தன.
மாம்பலம் காவல் நிலைய ஆய் வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான காவல் துறையினர் உடனடி விசாரணையில் இறங்கி துரிதமாக தேடுதலில் ஈடுபட்டனர். இதில் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மாலை 5 மணி அளவில் அண்ணா மேம்பாலம் அருகே செம்மொழி பூங்காவில் நிறுத்தப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீஸார் அங்கே மது அருந்திக் கொண்டிருந்த 5 கொள்ளையர்களை துப்பாக்கி முனையில் கைது செய்து, மாம்பலம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில், அவர்கள் சைதாப்பேட்டையை சேர்ந்த நிர்மல்ராஜ் (30), திருவல் லிக்கேணியை சேர்ந்த சீனிவாசன் (34), தமீம் (24), சண்முகம் (34), ராயப்பேட்டையை சேர்ந்த உசேன் (22) என்பது தெரியவந்தது.
இவர்களில் உசேன், தமீம் இருவரும் செல்போன் உதிரிபாக கடை அதிபர் அனிஷின் உறவினர்கள். தினமும் இந்த கடையில் இருந்து வங்கிக்கு ஊழியர்கள் பணம் கொண்டு போவதை உசேன், தமீம் இருவரும் கண்காணித்து நண்பர்களுடன் திட்டமிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.