

காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமப் பகுதியில் உள்ள சமய சன்மார்க்க நூலகத்தில், 17-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய நூல்களை கண்டறிந்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், அவற்றை மின் எண்மம் (டிஜிட்டல்) செய்து வெளியிடுவதற்காக கொண்டு சென்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில், கடந்த 1914-ம் ஆண்டு முதல் சமய சன்மார்க்க நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, கி.பி.17 மற்றும் 18-ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட பல அரிய வகை தமிழ் நூல்கள் உள்ளதாக, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், அந்நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன் தலைமையிலான குழுவினர், நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 1862-ம் ஆண்டு வெளிவந்த மதுரை 64, திருவிளையாடல், சர்குரு மாலை, 1889-ம் ஆண்டு வெளிவந்த சூரிய நாராயண சாஸ்திரிகளின் தமிழ்மொழி வரலாறு, 1894-ம் ஆண்டு வெளிவந்த மாத்ரு பூதையரின் நந்த மண்டல சதகம் (தொல்காப்பியத்தை ஒப்பிட்டு ஸ்ரீகிருஷ்ணரின் கதை), 1897-ம் ஆண்டு வெளிவந்த திருப்பதி திருமலையான் குறித்த வட வேங்கட நாராயண சதகம், 1899-ம் ஆண்டு வெளிவந்த சபாபதி நாவலர், 1905-ம் ஆண்டு வெளிவந்த திருஞான சம்மந்தரின் சரித்திரம் குறித்த ஓரடி சிந்து, 1914-ம் ஆண்டு வெளிவந்த ஆனந்தபோதினி இதழ், 1916-ம் ஆண்டு வெளிவந்த தொண்டை மண்டல சரித்திரம் உள்ளிட்ட 172 வகையான அரிய நூல்கள் இருப்பது தெரிந்தது. அந்த நூல்கள் அனைத்தையும் மின் எண்மம் (டிஜிட்டல்) செய்து வெளியிடுவதற்காக, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தினர் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, கோ.விஜயராகவன் கூறியதாவது: தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு அரிய நூல்கள் மற்றும் சுவடிகளை திரட்டி நூலாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்படும் சுவடிகள், தாள் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் அனைத்தும், சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள ‘சுவடியியல் பாதுகாப்பு மையத்தில்’ வைத்து பாதுகாக்கப்படும் என அறிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள சமய சன்மார்க்க நூலகத்திலிருந்து, முதுபெரும் தமிழ் அறிஞர்கள் உ.வே.சாமிநாத அய்யர், நா.மு.வெங்கடசாமி நாட்டார், வி.கே.சூரியநாராயண சாஸ்திரியர், யாழ்பாணம் ஆறுமுக நாவலர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, அம்பலவான தேசிகர், சபாபதி நாவலர், காஞ்சிபுரம் அரங்கநாத பிள்ளை உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களின் நூல்கள் என மொத்தம் 172 நூல்களை கண்டறிந்தோம்.
இந்நூல்களை, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், மின் எண்மம் செய்து, வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்நூல்களை வரும் 24-ம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், இதுவரை 2.5 லட்சம் அரிய நூல்கள் மின் எண்மம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.