

வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் முக்கியமான கருவிகளில் ஒன்று மண்வெட்டி. இந்தத் தொழில் இயந்திரமயமாகிவரும் நிலையிலும், மண்வெட்டியை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் அளவுக்கு மாற்றுக் கருவி பயன்பாட்டில் இல்லை.
முந்தைய காலத்தில் அழகாகவும், விரைவாகவும் வரப்பை வெட்டுபவருக்கே பெண் கொடுக்கும் பழக்கம் இருந்தது என்பார்கள். அந்த அளவுக்கு விவசாயத்துக்கான கருவியாக மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வைத் தீர்மானிப்பதாகவும் மண்வெட்டி இருந்துள்ளது.
மண் வளம் மற்றும் பயன்படுத்து வோரைப் பொறுத்து மண்வெட்டிகள் மாறுபடுகின்றன. கைப்பிடி குட்டை யாகவும், உட்புறம் வளைந்தும் ஒரு வகை மண்வெட்டி பயன்படுத் தப்படுகிறது. அதேசமயம், கைப்பிடி நீண்டும், நிமிர்ந்தும் மற்றொரு வகை மண்வெட்டி பயன்பாட்டில் உள்ளது. தங்களது தேவைக்கேற்ப விவசாயிகள் மண்வெட்டியைப் பயன்படுத்துகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டறைகளில் தயாரிக்கப்படும் மண்வெட்டிகள் பல் வேறு பகுதிகளிலும் விற்பனை செய் யப்படுகின்றன. இதுகுறித்து மண்வெட்டி தயாரிப்பாளர் கீரமங்கலம் சோ.முருகன் கூறியது:
நாங்கள் பரம்பரை பரம்பரையாக மண்வெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தொழிலின் அடிப்படைக் கூறுகளான குறுங் கொல்லு, நெடுந்தச்சு குறித்து மண் வெட்டி தயாரிக்கும் தொழிலாளி முழுமையாகத் தெரிந்து வைத் திருக்க வேண்டும். குறுங்கொல்லு என்பது இரும்பை சிறிது சிறிதாக அடித்து நீட்டுவதாகும். மண்வெட்டிக் குத் தேவைப்படும் மரத்தின் நீளத்தை சற்று கூடுதலாகவே வைத்து, தச்சு வேலை செய்ய வேண்டுமென்பதே நெடுந்தச்சாகும்.
கொல்லு மற்றும் தச்சு வேலை தெரிந்தவர்கள் மட்டுமே மண்வெட்டி தயாரிக்க முடியும். அதிலும், வாட்டம் சரியாக இருக்க வேண்டும். ஒரு டிகிரி அளவுக்கு வாட்டம் மாறினாலும்கூட, அதை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். ஏனெனில், தவறாக செய்யப்படும் மண்வெட்டியால், அரை மணி நேரத்திலேயே விவசாயிக்கு உடல் வலி ஏற்பட்டு, களைத் துப் போய் வரப்பில் அமர்ந்து விடுவார்.
அதேபோல, கைப்பிடியில் பொருத்தப்படும் தகடு அசைவின்றி இருக்க வேண்டும். மரத்துக்கும், இரும்புக்கும் இடையே சிறிதும் இடைவெளி இருக்கக் கூடாது. நாங்கள் தயாரிக்கும் மண்வெட்டியில் இது போன்ற பிரச்சினைகள் இருக்காது.
ஒரு மண்வெட்டி ரூ.500-க்கு விற் பனை செய்கிறோம். தினமும் சுமார் 20 மண்வெட்டிகள் செய்கிறோம். குறைந்தது 5 பேர் இருந்தால் மட் டுமே மண்வெட்டி தயாரிக்க முடியும். வயதான விவசாயிகூட அலுப்பு, களைப்பில்லாமல் வேலை செய்ய முடியும் என்பதே கீரமங்கலம் பகுதி மண்வெட்டியின் சிறப்பு.
மண்வெட்டியை மிகுந்த கவன முடன் தயாரிக்கிறோம். மண் வெட்டியைப் பயன்படுத்தும் அடிப் படை முறைகளை முழுமையாகப் பின்பற்றினால் பல ஆண்டுகள் பயன் படுத்தலாம். வெளி மாநிலங்களுக்கு தோட்ட வேலைக்குச் செல்வோரும், கீரமங்கலம் மண்வெட்டியை வாங்கிச் செல்கின்றனர்.
மழையைப் பொறுத்தே மண்வெட் டியின் தேவையும் இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக தொழில் பாதிக்கப் பட்டிருந்தாலும், நடப்பாண்டில் மண் வெட்டி விற்பனை நன்றாக உள்ளது. கீரமங்கலத்தில் உள்ள ஏராளமான பட்டறைகளில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் மண்வெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.