Published : 21 Feb 2015 09:14 AM
Last Updated : 21 Feb 2015 09:14 AM

வனக் கல்லூரி மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தீவிரம்

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கோவை மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரி மாணவ, மாணவிகளின் நிலைமை ஒருபக்கம் மோசமாகி வந்தாலும், மறுபக்கம் தீவிரமடைந்து வருகிறது.

வனச்சரகர் பணியிடங்களில் 100 சதவீதம், வனவர் உட்பட வனத்துறையில் உள்ள மற்ற பணியிடங்களிலும் குறிப்பிட்ட சதவீதம் பணியிட ஒதுக்கீடு கோரி போராடி வரும் அரசு வனக் கல்லூரி மாணவ, மாணவியர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

தினமும் ஒரு நூதனப் போராட்டம் நடத்திய இவர்கள், கடந்த நான்கு நாட்களுக்கு முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினமே மாணவ, மாணவியர் மயக்கமடைந்து மேட்டுப்பாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமானது. 40 பேருக்கு மேல் மயக்கமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும், அதில் பலர், போராட்டத்துக்கு திரும்பி வர முடியாத நிலையும் இருப்பதால் 108 ஆம்புலன்ஸில் ஏற மறுத்தனர்.

வலிப்பு வந்து துடித்த ஒரு மாணவி, சிகிச்சை பெற மறுத்தார். மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மயக்கமடைந்தவர்களில் சிலர் சிகிச்சை பெற்று திரும்பி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

நேற்று மதியம் சிபிஐ(எம்எல்) மற்றும் எஸ்ஒஎப்ஐ என்ற மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், கல்லூரியின் பிரதான வாயிற் கதவு போலீஸாரின் கட்டுப் பாட்டில் கொண்டுவரப்பட்டு, பூட்டப்பட்டது.

அதற்குப் பிறகு திமுக, காங்கிரஸ், தமாக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் என எந்த கட்சியினரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களை சந்திக்க காந்திய மக்கள் இயக்கத்தினரும் நேற்று அனுமதிக்கப்படவில்லை. மொத்தத்தில், மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரமாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x