

‘தமிழக சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகளைப் பேச விடாதது தவறு; அதைவிட, எதிர்க்கட்சித் தலைவர் சட்டப்பேரவைக்கு வராதது தவறு’ என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. மதுரையில் நேற்று நடைபெற்ற மதிமுக மாநில இளைஞர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்பதற்காக மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதற்காக, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்புத் தலைவர் மேதா பட்கர் மார்ச் 1-ம் தேதி மதுரை வருகிறார்.
செக்கானூரணியில் பிரச் சாரத்தைத் தொடங்கும் அவர், செல்லம்பட்டி, உசிலம்பட்டி, தேனி, ஆண்டிப்பட்டி, உப்புக்கோட்டை, பொட்டிபுரம் உள்ளிட்ட ஊர் களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து விளக்குகிறார். பின்னர், தேவாரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மேதா பட்கர் பேசுகிறார். மேலும், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது.
தேனி, இடுக்கி மாவட்டங்களை பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடியது என்பதால்தான் நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம். இதை எதிர்க்கும் முடிவில் உறுதியாக உள்ளோம். இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோரிடமும் பேசியுள்ளேன்.
இலங்கை செல்ல எதிர்ப்பு
மோடி- மைத்ரி ஆகியோரின் நயவஞ்சகத் திட்டத்தின் அடுத்த கட்டமே மோடியின் இலங்கை பயணம். லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடுமையை மூடி மறைப்பதற்காக அணு ஆயுதம் உட்பட 4 ஒப்பந்தங்களை மோடி அரசு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ‘இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்ற 2 தீர்மானங்களை நிறைவேற்றினார். அவற்றை காலில் போட்டு மிதிக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது என்றார் வைகோ.