

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன், 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ரோபோ கருவி உதவியுடன் மீட்கப்பட்டான். இப்பணியில் ஈடுபட்ட மதுரை மீட்பு குழுவினரை, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குத்தாலப் பேரியைச் சேர்ந்தவர் கணேசன் (41); பள்ளி ஆசிரியர். இவரது மகன் ஹர்சன் (3).
கணேசன் தனது வீட்டின் அருகே எலுமிச்சைத் தோட்டம் வைத்துள்ளார். இத்தோட்டத்தில் 4 நாட்களுக்கு முன்பு 400 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அதில் தண்ணீர் வரவில்லை. இதனால், ஆழ்துளை கிணற்றின் மேல்பகுதியை சாக்குப்பையால் கணேசன் மூடி வைத்திருந்தார்.
தவறி விழுந்த சிறுவன்
திங்கள்கிழமை காலை கணேசன், தனது மகன் ஹர்சனுடன் தோட்டத்துக்குச் சென்றார். அங்கு விளையாடிய ஹர்சன் காலை 9.45 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந் தான். பதறிப்போன கணேசன் சங்கரன்கோவில் தீயணைப்பு படை யினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு படையினர் காலை 11 மணிக்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், மாவட்ட எஸ்.பி. நரேந்திரன்நாயர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்தனர். தகவலறிந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் அங்கு சோகத்துடன் திரண்டனர்.
மழையால் பாதிப்பு
சிறுவனை மீட்க ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டப் பட்டது. 7 அடி வரை தோண்டப் பட்டபின் சுண்ணாம்புக்கல் பாறை யாக இருந்ததால், தொடர்ந்து தோண்ட முடியவில்லை. இதனி டையே அப்பகுதியில் மிதமான மழை பெய்ததால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் அமைப்பு மதுரையில் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அந்த அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘மதுரை மீட்பு குழு’ என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த 4 பேர், தாங்கள் உருவாக்கிய ரோபோ கருவியுடன் பிற்பகல் 2.30 மணிக்கு அங்கு வந்தனர். ஹர்சனை மீட்கும் பணியில் அக் குழுவினர் விரைவாக ஈடுபட்டனர்.
ரோபோ மீட்பு
ரோபோவில் பொருத்தப்பட்ட மனிதனின் கை போன்ற இரு ராட்சத கைகளை, ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தி, ஹர்சனை மீட்க முயற்சிக்கப்பட்டது. 15 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்தது அந்த கருவியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம், தரைக்கு மேலே இருந்த வீடியோ திரையில் தெரிந்தது.
சிறுவனை மீட்கும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. சிறிது உயரம் தூக்கிய நிலையில் சிறுவன் நழுவி கீழே விழுந்தான். மீண்டும் முயற்சி செய்ததில், கருவியின் ராட்சத கைகள் ஹர்சனை கெட்டியாகப் பற்றிக் கொண்டன. தீவிர போராட்டத்துக்கு பின், பிற்பகல் 3.50 மணிக்கு சிறுவன் பத்திரமாக வெளியே தூக்கிவரப்பட்டான்.
கைகளைத் தட்டி மக்கள் ஆரவாரம் செய்தனர். சிறுவன் உடல் முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. மிகவும் சோர்வாக காணப்பட்ட ஹர்சன் ஆம்புலன்ஸ் மூலம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலமாக உள்ளான்.
மதுரை குழுவின் மகத்தான சேவை
சிறுவன் ஹர்சனை பத்திரமாக மீட்ட மதுரை மீட்புக் குழுவினர் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவில் எம்.மணிகண்டன், எம்.திருநாவுக்கரசு, எம்.வல்லரசு, பி.ராஜ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மணிகண்டன் ஐ.டி.ஐ. பிட்டர், திருநாவுக்கரசு பி.இ. எலக்ட்ரானிக்ஸ், வல்லரசு பி.இ. மெக்கானிக்கல் படித்துள்ளனர். திருநாவுக்கரசும், மணிகண்டனும் மதுரை டி.வி.எஸ். கம்யூனிட்டி கல்லூரியில் பணிபுரிகிறார்கள். வல்லரசு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடந்த சம்பவத்தில் சிறுவன் ஹர்சன் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதையடுத்து மதுரை மீட்பு குழுவினரை பொதுமக்கள் மிகவும் பாராட்டினர். திங்கள்கிழமை தீ தொண்டு நாளாக கடைபிடிக்கப்பட்டது. இந்நாளில் ஹர்சனை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.