

வங்கிகள் கூட்டமைப்பும், அரசும் இரட்டை நிலை அணுகுமுறையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்னிந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (எஸ்ஐபிஓஏ) பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் மற்றும் மண்டல குழுக் கூட்டம் சென்னையில் நடை பெற்றன. விழாவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தமிழக பிரிவின் பொதுச் செயலாளர் விஜயசேனன் தொடங்கிவைத்தார். எஸ்ஐபிஓஏ தலைவர் சி.கே.கோபி கிருஷ்ணன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் என்.ஐ.தாமஸ் முக்கிய உரையாற்றினார். சவுத் இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் கே.சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவின்போது, “ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதில் வங்கிகள் உத்வேகமற்று செயல்படுகின்றன. ஒருபுறம் வங்கி அதிகாரிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது, பணி நேரம் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. மற்றொருபுறம் ஊதியத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. எனவே வங்கிகள் கூட்டமைப்பும், அரசும் இரட்டை நிலை அணுகுமுறையை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.