

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குவாரி அதிபர்களிடம் நேரடி விசாரணையைத் தொடங்கினார். இன்று ஆஜராகும்படி பிஆர்பி கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஏற்கெனவே 6 கட்ட விசாரணையை முடித்துள்ளார். நேற்று 7-ம் கட்டமாக குவாரி அதிபர்களிடம் முதல்முறையாக விசாரணையைத் தொடங்கினார். வரும் வியாழக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விசாரணையில், ஆஜராகும்படி 16 குவாரி அதிபர்களுக்கு ஏற்கெனவே சகாயம் சம்மன் அனுப்பியிருந்தார்.
நேற்று ஆஜராகும்படி குவாரி அதிபர்கள் கோட்டைவீரன், சோலைராஜன் மற்றும் சென்னை தீபா இன்ப்ளக்ஸ் இந்தியா, மதுரை லட்சுமி எக்ஸ்போர்ட், திருப்பத்தூர் விஜயா கிரானைட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கோட்டைவீரன் சார்பில் வழக்கறிஞர் கதிரேசன் ஆஜரானார். கோட்டைவீரன் டெல்லி சென்றுள்ளதால், வரும் வியாழக்கிழமை ஆஜராக அனுமதி கேட்டார். அன்று நடைபெறும் விசாரணையைப் பொறுத்து, அனுமதி வழங்கப்படும் என சகாயம் தெரிவித்தார்.
சோலைராஜன் கிரானைட் முறைகேடு வழக்கில் சமீபத்தில் கைதாகி சிறையில் இருப்பதால், அவரால் ஆஜராக முடியவில்லை என அவரது சார்பில் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். இதர நிறுவனங்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
ஆஜராகும் நிறுவனங்கள் குறித்து, சகாயம் ஏற்கெனவே நடத்திய ஆய்வில் கண்டறிந்த விதிமீறல்கள், பொதுமக்கள், பொதுப் பணித் துறை, கனிமவளத் துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் அளித்துள்ள விவரங்கள் அடிப்படையில் 20 கேள்விகளை சகாயம் தயார் செய்திருந்தார். இதற்கான பதிலை வாக்குமூலமாக குவாரி அதிபர்களிடம் பெற சகாயம் திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று யாரும் ஆஜராகவில்லை.
இன்று பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் சார்பில் அதன் அதிபர் பிஆர்.பழனிச்சாமி, பிஆர்பி மகன் செந்தில்குமார், சிந்து கிரானைட்ஸ் அதிபர் செல்வராஜ், முருகேசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
புதன்கிழமை ஆஜராகும்படி கோரமண்டல், கசானியா, எம்எஸ் கிரானைட்டுக்கும், வியாழக்கிழமை ஒலிம்பஸ், பிஆர் கிரானைட், பெரியகருப்பன் ஆகியோருக்கும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குவாரி அதிபர்கள் சார்பில் வழக்கறிஞர்களே ஆஜராக வாய்ப்புள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, கிரானைட் முறைகேட்டில் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் விசாரணை நடத்தினார்.
இதில், கிரானைட் அதிபர் ஒருவர்கூட நேரில் ஆஜராகவில்லை. மாறாக, தங்கள் தரப்பு விளக்கத்தை வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்தனர்.
இதிலும், அனைவரின் விளக் கங்களும் ஒரே மாதிரியாகவே இருந்தன. இதே பாணியில் சகாயத்துக்கும் பதில் அளிக்க குவாரி அதிபர்கள் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
குவாரி அதிபர்கள் நேரில் ஆஜராகும்பட்சத்தில் இப்பிரச்சி னையில் புதிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் அடுத்தகட்டமாக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சகாயம் திட்டமிட்டுள்ளார்.