Published : 03 Feb 2015 09:44 AM
Last Updated : 03 Feb 2015 09:44 AM

திருமணத்தை நிறுத்தியதால் ஆவேசமடைந்த மாணவி அதிகாரிகளுடன் வாக்குவாதம்

வத்தலகுண்டில் 18 வயது நிரம்பாத சென்னையைச் சேர்ந்த மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை நேற்று சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த மாணவி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், வத்தலகுண்டு அருகே தும்மலப்பட்டியை சேர்ந்த இளைஞ ருக்கும், நேற்று காலை வத்தலகுண்டு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந் தது. தகவலறிந்த சமூக நலத்துறை அதிகாரி நாகபிரபா, வத்தலகுண்டு எஸ்.ஐ. ஆனந்தி ஆகியோர் நேற்று முன் தினம் இரவு மண்டபத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மணமகளுக்கு 18 வயது ஆகிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், அதை நம்பாத அதிகாரிகள் மணமகளிடம் விசாரணை நடத்தினர். அவரும், தனக்கு 18 வயது நிரம்பிவிட்டதாகத் தெரிவித்தார். உடனே அதிகாரிகள், திருமண வயதை உறுதிசெய்ய படிப்புச் சான்றிதழைக் காட்டும்படி கேட்டனர். அதற்கு மணமகள், நான் பள்ளி பக்கமே ஒதுங்கியதில்லை என்றார். அதிகாரிகள் விடாப்பிடியாக வயதை உறுதி செய்ய, ஏதாவது சான்றை தருமாறு கேட்டனர். அப்போது பெண் வீட்டார், ‘எல்லா சான்றுகளையும் சென்னையிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டோம்’ என்றனர்.

இதனால் அதிகாரிகள், வயதை நிரூபிக்காமல் திருமணம் நடத்த அனு மதிக்க முடியாது எனக் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

பிரச்சினை நீடித்துக் கொண்டே சென்றதால், ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த மணப்பெண், தான் படிக்கவேயில்லை எனக் கூறியதையும் மறந்துவிட்டு ஆங்கிலத்தில் கோபமாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், படிக்கவே இல்லை என்று கூறிவிட்டு மணமகள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவது எப்படி எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து வேறு வழியின்றி, பெண் வீட்டார் மணமகளுக்கு 17 வயது தொடங்குவதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

இதேபோல, நத்தம் செந்தூரை அருகே மாமரத்துப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், செந்தூரைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த சமூக நலத்துறை அதிகாரி நாகபிரபா போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் நேற்று காலை நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x