துயரங்களை தாங்கி நின்றாலே முன்னேறலாம்: நீதியரசர் கற்பக விநாயகம் பேச்சு
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கும் செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் 19-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டியில் நடந்தது.
இதில், நீதியரசர் கற்பக விநாயகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, டாக்டர் கே.எம்.செரியன், சி.டி.டி.இ. மகளிர் கல்லூரி முதல்வர் ஹனிபா கோஷ், செந்தமிழ்ச் சோலை பொது தொடர்பு ஆலோசகர் சுவாமிநாதன், கவிஞர் ரவி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் நீதியரசர் கற்பக விநாயகம் பேசியதாவது:
ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் துயரங்களை, அவமானங்களை சந்தித்து அதை தாங்கி நின்றாலே வாழ்வில் முன்னேற முடியும். அதேபோல, யார் நேர்மையாக செயல்படுகிறாரோ, உழைத்து வாழ வேண்டும் என நினைக்கிறாரோ, அவரை இந்த நற்பண்புகளே வாழ்வில் உயர்த்தி விடும். மாணவர்கள் ஆசிரியர்களை இறைவனாக நினைக்க வேண்டும் என்றார்.
சந்திரசேகரின் ‘காட்டருவி’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பால்சாமி, எம்.எல்.ஏ., சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
