

கோயில் பூசாரியை தற்கொலைக்குத் தூண்டியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீதான வழக்கில், தற்கொலை செய்வதற்கு முன் பூசாரி எழுதிய கடிதம் உண்மையானது என்பது தடயவியல் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தற்கொலை வழக்கில் விசாரணையை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த என்.சுப்புராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது மூத்த மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தார். கோயில் அறங்காவலர்கள் எனது மகனை தாக்கி கோயிலில் இருந்து வெளியேற்றினர். இதுதொடர்பாக, தென்கரை காவல் நிலையத்தில் நாகமுத்து புகார் செய்தார்.
இந்நிலையில், நாகமுத்து 7.12.2012-ல் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய் வதற்கு முன்பு, தனது மரணத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட் சித் தலைவருமான ஓ.ராஜா, மணிமாறன், பாண்டி, சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர்தான் காரணம் என நாகமுத்து கடிதம் எழுதி வைத்துள்ளார்.
ஓ.ராஜா மீது வழக்கு
இதையடுத்து, நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஓ.ராஜாவுக்கு எதிரான வழக்கை முடிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஓ.ராஜாவும், மற்றவர்களும் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஓ.ராஜா உள்ளிட்ட 7 பேர் தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதி எம். சத்தியநாராயணா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் சி.ரமேஷ் வாதிடும்போது, நாகமுத்து, தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் உள்ளது அவரது கையெழுத்துதான் என்பது தடயவியல் ஆய்வில் உறுதியாகி உள்ளது. இதையடுத்து, தற் கொலை கடிதத்தின் அடிப்படை யில் விசாரணை நடத்தப்படும் என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர்கள் பி.ரத்தினம், ஆர். அழகுமணி வாதிடும்போது, மனுதாரர் மகனை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முதல் எதிரி, தமிழக முதல்வரின் சகோதரர். எனவே, விசாரணை நியாயமாக நடைபெறாது என்றார்.
நியாயமான விசாரணை
இதை மறுத்த அரசு வழக்கறி ஞர், போலீஸார் நியாயமான விசா ரணை நடத்தி தேவையான ஆவ ணங்களை சேகரிப்பர் என்றார்.
இதையடுத்து, தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி, மூடி முத்திரையிட்ட கவரில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், துணை காவல் கண்காணிப்பாளர், தென்கரை காவல் ஆய்வாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.