கழிவுநீர் தொட்டி இடிந்த விபத்தில் பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்

கழிவுநீர் தொட்டி இடிந்த விபத்தில் பலியான தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தல்
Updated on
1 min read

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் கழிவுநீரில் மூழ்கி பலியான 10 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் சேமிப்பு தொட்டி இடிந்து விழவே, அதிலிருந்து வெளியான கழிவு நீரில் மூழ்கி 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கழிவுநீர் தொட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட திடக் கழிவுகளை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்ட அந்த கழிவுநீர் தொட்டியில் சுத்திகரிக்கப்படாத திரவக் கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ளன.

மேலும் தோல் கழிவுகள் கொட்டப்பட்டதால், அதிலுள்ள குரோமிக் ஆசிட் சுவற்றை அரித்துள்ளது. இதனை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், அந்நிறுவனம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அந்த தொட்டியில் அளவுக்கு அதிகமாக கழிவுகளை கொட்டி யதால் அழுத்தம் தாங்காமல் அதன் சுவர் உடைந்திருக்கிறது. இதனாலேயே 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனத்தின் அலட்சியப் போக்கும், அதனை கண்காணிக்காத அரசும் தான் இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த தொழிலாளர் களுக்கு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை செய்து, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளதால், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in