

வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம், பரிசு, மது கொடுப்பதை கட்டுப்படுத்தும் வகையில் வீடியோ, ஆடியோ பதிவுடன் கூடிய ஆன்லைன் புகார் பிரிவை தமிழக தேர்தல் துறை தொடங்கியுள்ளது.
வாக்காளருக்கு ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்கள், மது வழங்குவது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, புதிதாக ஆன் லைன் புகார் பிரிவை தமிழக தேர்தல் துறை தொடங்கியுள்ளது. முதல்முறையாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இந்த திட்டம் அறிமுகமாகிறது.
இதன்படி, தமிழகத் தேர்தல் துறை இணையதளத்தில் ஆன் லைன் புகார் என்ற ஆப்ஷன் தொடங்கப்பட்டுள்ளது. >http://elections.tn.gov.in/complaints.html என்ற இணைப்பை கிளிக் செய்தால் அகன்ற திரையில், பல்வேறு புகார்கள் தொடர்பாக தனித்தனியான தலைப்புகளில் உட்புகும் ஆப்ஷன்கள் அளிக்கப் பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், பரிசு, அன்பளிப்பு கூப்பன்கள் வழங்குதல், இலவசமாக மது வழங்குதல், சட்டவிரோதமாக சுவரொட்டி, பேனர்கள் அமைத்தல், துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல், அனுமதியின்றி வாகனங்களில் அணிவகுத்து செல்லுதல், பணம் வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடுதல் மற்றும் இதரப் பிரச்சினைகள் என 8 தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த புகார் பிரிவை இயக்கினால் முதலில் மாவட்டம், தொகுதியை குறிப்பிட்டுவிட்டு, பின்னர் பிரச்சினை நடந்த இடம் மற்றும் முகவரியை பதிவு செய்ய வேண்டும். புகார் தொடர்பாக தங்களிடம் இருக்கும் புகைப்படங்கள், ஆவணம், வீடியோ, ஆடியோ ஆதாரங்களை கணினி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து புகார் குறித்த கருத்துகளை பதிவிட வேண்டும்.
புகார் கூறுபவரின் பெயர் அல்லது அமைப்பு மற்றும் செல்போன் எண் (புகார் குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் சந்தேகம் கேட்பதற்காக) ஆகியவற்றை பதிவு செய்து புகாரை அனுப்ப வேண்டும். இந்த முறையில் ஆதாரம் இல்லாமல் புகாரை அனுப்ப முடியாது.
புகார் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் உடனடியாக விசாரணையைத் தொடங்குவார். புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் பதிவுக்கான ரசீது வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். கணினி மட்டுமின்றி ஸ்மார்ட் போன்கள் மூலமும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனி வரும் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் இந்த ஆன் லைன் முறை மூலம் கட்சிகள், அமைப்புகள், வாக்காளர்கள், சமூக ஆர்வலர்கள் புகார்களை தெரிவிக்கலாம்.