

கொட்டும் மழை, அடிக்கின்ற வெயில் என மாறி, மாறி மிரட்டும் சீதோஷ்ண நிலைகளுக்கு மத்தியில், நாகர்கோவிலின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களோடு கைகோர்த்து, முழுக்க, முழுக்க சேவை மனப்பான்மையோடு போக்குவரத்தை சீர் செய்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த விஜயன் (50). அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 3 ஆண்டுகளாக என்பதுதான் ஆச்சர்யம்.
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த விஜயனிடம் பேசினோம். `நாகர் கோவிலை அடுத்துள்ள சித்திரை திருமகாராஜபுரம் என்னோட சொந்த ஊரு. திருமணம் ஆகல்ல. அம்மா, அப்பா இருந்த வரைக்கும் தனியார் நிறுவன செக்யூரிட்டியா வேலை பார்த்தேன். அவங்க இறந்த பின்னாடி எனக்கு பணத் தேவை குறைஞ்சிடுச்சு.
பிழைப்புக்காக ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் ஒரு சேவை யாக போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினேன். முழுசா 3 வருஷம் தாண்டிடுச்சு.
தினமும் காலையில் 8 மணிக்கு வந்துடுவேன். 11 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். பின்னர் மாலை 5 மணிக்கு வந்து விட்டு இரவு 8 மணி வரை போக்குவரத்தை சீர் செய்வேன். வேப்பமூடு, கோட்டாறு, செட்டிக்குளம் பகுதிகளில் மாறி, மாறி டியூட்டி பார்ப்பேன். பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் டீ, காபி, வடைன்னு சாப்பிட ஏதாவது வாங்கித் தருவாங்க. தினமும் இரவு நாகர்கோவிலில் இருக்கும் என்னோட மாமா வீட்டுல போய் படுத்துப்பேன்.
செக்யூரிட்டியா இருக்கும் போது வாங்குன காக்கி சட்டை, பேன்டை போட்டுக்குவேன். போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் நின்று கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது சிலர் மதித்து நடப்பர். சிலர் வித்தியாசமாக கூட பார்த்துட்டு போவாங்க.
யார் எப்படி நினைச்சாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு இந்த வேலை திருப்தியாய் இருக்கிறது” என்றவர் சாலை சீரமைப்பு பணிகளில் மூழ்கினார்.