

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, மார்ச் 2-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க 42 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.43 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, அரசு சார்பில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம், கடந்த 11-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் நடந்தது. அப்போது, தொழிற்சங்கங்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் மட்டுமே பெறப்பட்டது. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, பல்லவன் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். கடந்த 14-ம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, மார்ச் 3-ம் தேதி மீண்டும் வேலைநிறுத்தம் செய்யப்படும் என அறிவித்தனர். இதற்கிடையே, தமிழக அரசு அமைத்த 14 பேர் கொண்ட குழுவினர் அவசர ஆலோசனை நடத்தினர். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை மார்ச் 2-ம் தேதி நடத்தலாம் என முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 11-ம் தேதியே தொடங்கிவிட்டது. முதல்கட்ட கூட்டத்தில் தொழிற்சங்கங்களிடம் இருந்து மனுக்களை பெற்றுள்ளோம். தற்போது, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மார்ச் 2-ம் தேதி குரோம்பேட்டையில் நடக்கவுள்ளது.
இதற்காக ஏற்கெனவே மனு கொடுத்துள்ள 42 தொழிற்சங்கங்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளோம்’’ என்றனர்.
வேலைநிறுத்த நோட்டீஸ்
பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் சார்பில் தனித் தனியாகவும், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சேர்ந்து பொதுவாகவும் சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் நேற்று வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.
இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன், சிஐடியு துணைத் தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு முறையும் போராட்டம் அறிவித்தால்தான், அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்கிறது. மார்ச் 3-ம் தேதி வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தோம். அதன்படி, நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கினோம். இந்நிலையில், மார்ச் 2-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால், திட்டமிட்டபடி மார்ச் 3-ம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும்’’ என்றனர்.