Published : 02 Feb 2015 10:31 AM
Last Updated : 02 Feb 2015 10:31 AM

நியூட்ரினோ போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு பிப். 7-ல் கேரள முதல்வருடன் வைகோ சந்திப்பு

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக இணைந்து போராடுவது குறித்து கேரளா முதல்வர் உம்மன் சாண்டியை வரும் 7-ம் தேதி சந்தித்து பேசவுள்ளதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுகவின் 23-வது மாநில பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

காவிரி குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதை எதிர்த்தும், மீ்த்தேன் திட்டத்துக்கு எதிராகவும் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் பிப்ரவரி 18, மார்ச் 11, 23 ஆகிய தேதிகளில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

உம்மன் சாண்டியுடன் சந்திப்பு

நியூட்ரினோ திட்டத்தால் தமிழகத்தின் தேனி மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும். முல்லை பெரியாறு மற்றும் இடுக்கி அணைகளுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இந்த திட்டத்துக்கு எதிராக இணைந்து போராடுவது தொடர்பாக கேரளா முதல்வர் உம்மன் சாண்டியை வரும் 7-ம் தேதி மாலை 4 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசவுள்ளேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தத்தையும் சந்தித்து ஆதரவு கேட்பேன்.

மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மராத்தான் போட்டிகள் நடத்தப்படும். கோட்சேவுக்கு சிலை வைக்கும் முயற்சியை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை. இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட முயற்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.

மத்திய அரசை எதிர்த்து யுத்தம் நடத்துவதால், தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. அதே சமயம், பிரச்சினைகள் அடிப்படையில் தமிழக அரசை எதிர்ப்போம்.

இலங்கை அகதிகள்

இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பக்கூடாது. இலங்கையில் அரசியல் சட்டம் 13-வது பிரிவை திருத்தப்போவதாக அறிவிப்பு, அகதிகளை திரும்ப அழைப்பது போன்றவை வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தை ஏமாற்றுவதற்காக இந்தியா, இலங்கை அரசுகள் சேர்ந்து நடத்தும் ஏமாற்று வேலை. இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பலன் தராது. இலங்கை பிரச்சினைக்கு தனி தமிழ் ஈழம் தான் தீர்வு.

2016-ம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என கடந்த மக்களவை தேர்தலின் போது எடுத்த முடிவில் மாற்றமில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x