Published : 11 Feb 2015 09:05 AM
Last Updated : 11 Feb 2015 09:05 AM

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க சிறப்பு பிரிவு, சிறப்பு நீதிமன்றம் அமைத்தது செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டில் நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க சிறப்புப் பிரிவும், இவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும் அமைப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக 36 சிறப்புப் பிரிவுகளை அமைக்க 2011-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி மற்றொரு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைகளை ரத்து செய்யக் கோரி திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., ஆர்.தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.விடுதலை, பி.வில்சன் உள்ளிட்டோர் ஆஜராகி, “அரசியலில் எதிர்கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் இந்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14, 21, 300ஏ பிரிவுகளை மீறுவதாக இவை அமைந்துள்ளன. சட்டப்படி இந்த அரசாணைகள் செல்லத்தக்கதல்ல. மேலும், “நில அபகரிப்பு” என்பது பற்றி விவரிக்கப்படாத நிலையில் அதுகுறித்து விசாரிப்பதற்கு சிறப்பிப் பிரிவும், சிறப்பு நீதிமன்றங்களும் தேவையில்லை” என்று வாதிட்டனர்.

இவ்வழக்கில் உள்துறை முதன்மைச் செயலாளர் சார்பில் அரசு மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி, சண்முகவேலாயுதம் ஆகியோர் ஆஜராகி, “கடந்த ஆட்சியின்போது நில அபகரிப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் உட்பட பலர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பெறப்பட்ட 1,887 புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த அரசாங்கம் இப்புகார்களை விசாரிக்க புதிய சட்டம் இயற்றியது. திமுக உள்ளிட்ட முக்கியமான அரசியல் கட்சியினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதற்காக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக கூறுவது தவறு. சொத்துக்களை முறைகேடாக பறிமுதல் செய்வோர் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்ய முடிகிறதே தவிர, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து சொத்துகளை மீட்டுத்தர அவர்களுக்கு அதிகாரம் இல்லை. எனவேதான் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க சிறப்புப் பிரிவும், இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும் அமைக்க அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன” என்று வாதிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி அளித்த தீர்ப்பு வருமாறு:-

வழக்கு பதிவு செய்து, ஒருவரைக் கைது செய்யும்போது அது அவருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிலையில், “நில அபகரிப்பு” என்ற சொல் அல்லது குற்றம் பற்றி விவரிக்கப்படாத காரணத்தாலும், அதுதொடர்பான வழிகாட்டுதல், வரையறை, கொள்கை இல்லாத நிலையில், காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, நில அபகரிப்பு குறித்து விசாரிக்கும்போது அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. நில அபகரிப்பு குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு பிரிவை அமைக்க 28-7-2011 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 21-ஐ மீறுவதாக உள்ளது. எனவே, இந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

சொத்துகள் தொடர்பான உரிமையியல் வழக்குகளை, சிறப்பு நிவாரணச் சட்டம் 1963, சொத்துகள் மாற்று சட்டம் 1882, சாட்சிகள் சட்டம் 1842 உள்ளிட்ட சட்டங்களின் கீழ் விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வழிவகை உள்ளது. எனவே, நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க மேற்கண்ட சட்டத்தில் வழிவகையில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க சிறப்பு பிரிவு அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுவதால், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையும் தானாகவே ரத்தாகிவிடும். தேவைப்பட்டால், நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க, ஆந்திர பிரதேசம் நில அபகரிப்பு (தடை) சட்டம் 1982-ஐ போன்றோ அல்லது அதைவிட சிறந்த சட்டத்தையோ தமிழக அரசு கொண்டு வரலாம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

3,300 நில அபகரிப்பு வழக்குகள் பதிவு

நில அபகரிப்பு குறித்து புகார் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் 36 இடங்களில் தனிப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய காவல் நிலையங்களில் இந்த பிரிவுகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு இடத்திலும் காவல் உதவி ஆணையரின் கீழ் இந்த தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இங்கு இதுவரை 3,300 நில அபகரிப்பு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x