

சென்னை பாரிமுனையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வரும் கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லாததால், அந்தக் கல்லூரியை இடம் மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என்று உத்தரவிடக் கோரி, சட்டக் கல்லூரி மாணவர் ஐ. சித்திக் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு விவரம்:
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி அமைந்துள்ள கட்டிடம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால், கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற அரசு திட்ட மிட்டிருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதை யடுத்து, சட்டக் கல்லூரி மாணவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்சினையில் நிவாரணம் கோரி அவர்கள் நீதிமன்றத்தை அணுகாமல், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துள்ளனர். சட்டக் கல்லூரி அமைந்துள்ள கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை என்று பொதுப்பணித் துறையும், நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கட்டிடம் இடிந்து அசம்பாவிதம் நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?
பாதுகாப்பு விஷயத்தில் இந்த நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது.
சட்டக் கல்லூரியை இதே கட்டிடத்திலேயே நடத்த வேண்டும் என்று நிபுணர்கள்போல மாணவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. கல்லூரியை இட மாற்றம் செய்வதால், கல்வித் தரம் குறையும் என்று கூறுவதற்கு மனுதாரருக்கு தகுதி இல்லை.
சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. நகரின் மையப் பகுதியில்தான் சட்டக் கல்லூரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிவித்து, மனுதாரரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.