சங்கரராமன் கொலை வழக்கில் கைதானவர் புற்றுநோயால் அப்பு மரணம்

சங்கரராமன் கொலை வழக்கில் கைதானவர் புற்றுநோயால் அப்பு மரணம்
Updated on
1 min read

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான அப்பு எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கம்சானி கோபாலகிருஷ்ண மூர்த்தி (என்கிற) அன்புசெல்வம் (என்கிற) அப்பு (59). பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி சென்னை வந்த இவர், அரசியல்வாதிகளின் தொடர்புகள் மூலம் ரவுடியாக உருவெடுத்தார். கோபாலபுரத்தில் வசித்து வந்த அப்பு, கொலை, கடத்தல், கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்புவை போலீஸார் கைது செய்தனர். நீண்டகாலமாக நடந்து வந்த இந்த வழக்கில் இருந்து அப்பு உள்ளிட்ட அனைவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின் சென்னை போலீஸில் எந்த வழக்கிலும் சிக்காமல், ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊரில் அப்பு வாழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி செம்மரம் கட்டைகள் கடத்திய வழக்கில் ஆந்திர போலீ ஸார் அப்புவை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப்பு, ஆந்திராவில் உள்ள ராஜ முந்திரி சிறையில் அடைக்கப்பட் டார். அப்புவுக்கு எலும்பு புற்று நோய் பாதிப்பு இருப்பதால் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது வக்கீல் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே கடந்த மாதம் 3-ம் தேதி அப்புவின் உடல்நிலை மோசமடைந்தது.

இதைத்தொடர்ந்து காக்கிநாடா அரசு மருத்துவமனையில் போலீ ஸார் அவரைச் சேர்த்தனர். அவ ருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் அப்பு உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வசித்து வரும் அப்புவின் குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. இன்று பகல் 11 மணி அளவில் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய் யப்படுகிறது.

அப்பு மீது தமிழகம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in